

உலகெங்கிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. கிறிஸ்துமஸைப் பொறுத்தவரை அது கிறிஸ்தவர்களின் பெருவிழாவாகும். கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நாட்டிற்கு நாடு வேறுபடும். அந்த வகையில் ஸ்வீடனில் கிறிஸ்துமஸ் புதிய அடையாளத்துடன் கொண்டாடப்படுகிறது. ஆம்... நீங்கள் கெவ்லே ஆட்டை பற்றி கேள்விப்பட்டிருகிறீர்களா?
கெவ்லே ஆடு... இது ஸ்வீடன் நாட்டின் கிறிஸ்துமஸ் சின்னமாகும். ஸ்வீடனின் கெவ்லே என்ற நகரில் ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்துமஸை முன்னிட்டு வைக்கோலினால் ஆடு ஒன்று வடிவமைக்கப்படும். இதுவே கெவ்லே ஆடு என்று அழைக்கப்படுகிறது. 1966-ஆம் ஆண்டு இந்த வைகோல் ஆடு கெவ்லே நகரத்தில் முதன்முதலாக நிறுவப்பட்டது. இந்த ராட்சத கெவ்லே ஆடு 42 அடி உயரமும் 3.6 டன் எடையும் கொண்டது. உலகின் மிகப் பெரிய வைக்கோல் ஆடு என்று கின்னஸ் புத்தகத்திலும் கெவ்லே ஆடு இடம்பெற்றது.
கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தையை தினம் முதலே கெவ்லே ஆடு அமைக்கப்பட்டுள்ள இடத்தில் ஸ்வீடன் மக்கள் தங்கள் குடும்பத்துடன் கூட ஆரம்பித்துவிடுவார்கள். பெரும் மகிழ்வுடனும், வான வேடிக்கையுடன் கிறிஸ்துமஸ் நாளை அம்மக்கள் அப்பகுதியில் கழிப்பார்கள்.
ஸ்வீடன் மக்களைப் பொறுத்தவரை இந்த கெவ்லே ஆடு அவர்களது உணர்வுகளுடன் தொடர்புடையது. அவ்வாறு இருக்கையில் அவர்களது உணர்வுகளைப் பாதிக்கும் எதிர்செயல்களும் நிகழும் தானே?!
ஒவ்வொரு ஆண்டும் கெவ்லே ஆடு அமைக்கப்படும்போது அந்த ஆட்டின் மீது தாக்குதல் நிகழ்வதும் தொடர்கதையாகிறது. 1966-ஆம் ஆண்டு முதலே கெவ்லே ஆட்டின் மீது தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறிவருகின்றன. கடந்த வெள்ளிக்கிழமையன்று கெவ்லே ஆட்டிற்கு தீ வைத்த சம்பவமும் நடந்துள்ளது. இதில் 40 வயது நபரை போலீஸார் கைது செய்தனர்.
கெவ்லே ஆடு தாக்கப்படுவது குறித்து பெண்மணி ஒருவர் பிபிசி செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, "உலகம் முழுவதும் அறியப்பட்ட கிறிஸ்துமஸ் சின்னத்தின் மீது ஒரு நபர் எப்படி இந்த வகையான தாக்குதலை நடத்த முடியும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை" என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.
2016-ஆம் ஆண்டு முதலே கெவ்லே ஆடு அடிக்கடி தீவைப்புக்கு உள்ளாகி வருகிறது. இதன் காரணமாக கிறிஸ்துமஸ் தின காலங்களில் கெவ்லே ஆட்டிற்கு பாதுகாப்பை ஸ்வீடன் அரசு அதிகரித்துள்ளது.
பதின்பருவத்தினரும், மது போதையில் இருப்பவர்களும், சில அமெரிக்கர்களும் கெவ்லே ஆட்டை தாக்குவதாக ஸ்வீடன் போலீஸார் தெரிவிக்கின்றனர். இந்த வெறுப்பின் பின்னால் இருக்கும் காரணம் இதுவரை சரியாகப் புலப்படவில்லை.
எதுவாகினும் பல தாக்குதல்களை கடந்து, ஸ்வீடன் மக்களின் கிறிஸ்துமஸின் சின்னமாகக் கருதப்படும் கெவ்லே ஆடு மிளிரும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இந்த ஆண்டும் அதே நம்பிக்கையுடன் மிளிர்ந்து கொண்டிருக்கிறது.