Published : 17 Dec 2021 09:02 AM
Last Updated : 17 Dec 2021 09:02 AM

தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்; பெருந்தொற்று பேராபத்தின் கடைசி அத்தியாயத்தில் இருக்கிறோம்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

அமெரிக்காவில் ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவிவரும் சூழலில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக செலுத்திக் கொள்ளுமாறு அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அதிபர் பைடன் பேசியதாவது:

அமெரிக்காவில் ஒமைக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டிசம்பர் 1 ஆம் தேதி கணக்கின்படி அன்றாட சராசரி தொற்று 86,000 ஆக இருந்தது. அதுவே டிசம்பர் 14 ஆம் தேதியின் படி 1 லட்சத்து 17 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இது 35% அதிகம்.
இந்த குளிர்காலத்தில் அதிகமானோர் நோய் வாய்ப்படவும், அதிகமான உயிரிழப்புகள் நேரவும் வாய்ப்புள்ளது. இப்போது இருக்கும் ஒரே பாதுகாப்பு தடுப்பூசி செலுத்திக் கொள்வது மட்டுமே. அமெரிக்கா கரோனா பெருந்தொற்று பேராபத்தின் கடைசி அத்தியாயத்தை பதற்றத்துடன் எதிர்கொண்டுள்ளது. இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் முதல் டோஸை போட்டுக் கொள்ளுங்கள். தடுப்பூசி செலுத்தியவர்கள் பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்ளுங்கள்.

இவ்வாறு நாட்டு மக்களுக்கு பைடன் வலியுறுத்தியுள்ளார்.

ஜி7 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் மாநாட்டின் போது ஒமைக்ரான் தொற்றை எதிர்கொள்ள சர்வதேச ஒத்துழைப்பு தேவை என்று கூறினர். ஒமைக்ரான் தான் உலக பொது சுகாதாரத்திற்கு இப்போதைய பெரும் அச்சுறுத்தல் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

உலகளவில் கரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு சராசரியாக அன்றாடம் 1150 கரோனா மரணங்கள் நிகழ்வதாக அந்நாட்டு நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சிடிஎஸ்) தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பர் இறுதியில் ஒமைக்ரான் தொற்று தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்டது.

ஒமைக்ரான் வைரஸ் இப்போது 77 நாடுகளில் பரவி உள்ளது. தென் ஆப்பிரிக்காவில் முதல் தொற்று கண்டறியப்பட்ட மூன்று வாரங்களில் 77 நாடுகளுக்குப் பரவி இருப்பது அதன் பரவும் தீவிரத்தைக் காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஒமைக்ரான் பரவல் அதிகமாக இருந்தாலும் கூட இதுவரை உலக நாடுகள் அளித்துவரும் தகவலின் அடிப்படையில் ஒமைக்ரான் வைரஸால் உயிர்ப் பலியோ கடுமையான நோய் பாதிப்போ இருப்பதாகத் தெரியவில்லை. ஒமைக்ரான் முதல் உயிர்ப்பலி பிரிட்டனில் பதிவானது. அங்கு தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்தனைக்கும் அங்கு 70% மக்கள் முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x