

லண்டனில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடத்தை ஹிந்துஜா குழுமம் முறைப்படி வாங்கி உள்ளது. எனினும் எவ்வளவு தொகைக்கு வாங்கப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களும் பிரிட்டனின் முன்னணி கோடீஸ்வரர்களுமான ஹிந்துஜா சகோதரர்கள், ஸ்பெயின் நிறுவனத்துடன் இணைந்து இந்தக் கட்டிடத்தை வாங்கி உள்ளனர்.
இரண்டாம் உலகப் போர் நடைபெற்றபோது, அப்போதைய பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், 1,100 அறைகள் கொண்ட இந்தக் கட்டிடத்தை போர் அலுவலகமாகப் பயன்படுத்தினார்.
பிரிட்டன் நாடாளுமன்றம், பிரதமரின் அரசு இல்லத்துக்கு அருகில், இலக்கம் 57 ஒயிட்ஹால் சாலையில் அமைந்துள்ள இந்தக் கட்டிடம், 7 தளங்களுடன் 5.80 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்டது.
நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஹிந்துஜா குழுமத்தின் இணைத்-தலைவர் ஜிபி ஹிந்துஜா, அவரது சகோதரரும் குழுமத்தின் தலைவருமான பி.பி. ஹிந்துஜா மற்றும் இவர்களது ஸ்பெயின் பங்குதாரரும் வில்லர்-மிர், ஓஎச்எல் குழும தலைவருமான ஜுவான் மிகுவெல் வில்லர்-மிர் ஆகியோரிடம் இந்தக் கட்டிடத்தின் சாவி ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பிரிட்டனுக் கான இந்திய தூதர் நவ்தேஜ் சிங் சர்னா, இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், இந்த திட்டத்துக்கு நிதியுதவி வழங்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அதிகாரி சஞ்சீவ் சத்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தக் கட்டித்தை 5 நட்சத்திர ஓட்டல் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பாக மாற்றி அமைக்கப் போவதாக ஹிந்துஜா சகோதரர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தனியார் நிகழ்ச்சிகளுக்கான அறைகள் மற்றும் ஸ்பா ஆகியவையும் இதில் இடம்பெறும்.
இதுகுறித்து பி.பி. ஹிந்துஜா கூறும்போது, “இந்தக் கட்டிடத் துக்கு அதன் பாரம்பரியம் மாறாமல் புது வடிவம் கொடுக்கப்படும்” என்றார்.
இதுகுறித்து பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் கூறும்போது, “இந்தக் கட்டிடம் 250 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் தரப்பட் டுள்ளது” என்றார்.