

வங்கதேசம் சென்ற மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து விவாதித்தார்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கடந்த புதன்கிழமை இரவு வங்கதேசம் சென்றார். அமைச்சரானதும் அவர் தனியாக மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். வங்கதேசத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள சுஷ்மா, அந்நாட்டின் அதிபர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேசுகிறார்.
அந்நாட்டுப் பிரதமர் ஷேக் ஹசீனா, வெளியுறவுத் துறை அமைச்சர் அபுல் ஹசன் மெஹ்மூத் அலி ஆகியோரை தனித்தனியே வியாழக்கிழமை சந்தித்த சுஷ்மா ஸ்வராஜ், வர்த்தக மற்றும் பொருளாதார மேம்பாடு குறித்து விவாதித்தார்
எல்லை வரையறை ஒப்பந்தம், தீஸ்தா நதிநீர்ப் பகிர்வு ஒப்பந்தம், சட்டவிரோத குடியேற்றம், திரிபுரா மின் உற்பத்தி நிலையத்திலிருந்து வங்க தேசத்துக்கு மின் விநியோ கம் செய்வது, இந்தியா வரும் வங்கதேசத்தவர்களுக்கு விசா வழங்கும் முறையை எளிமைப் படுத்துவது உள்ளிட்டவை குறித்து இருதரப்பினரும் பேச்சு நடத்தினர்.