

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் முதல் நாள் இரவில் தான் நிம்மதியாகத் தூங்கியதாகவும் எல்லோரும் சொல்வதைப் போல் தான் பேய் ஏதும் அங்கு பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார்.
ஃபுமியோ கிஷிடோ ஜப்பானின் அடுத்த பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கிஷிடா 2012 முதல் 17 வரை ஜப்பானின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்திருக்கிறார். அவர் ரஷ்யா, தென் கொரியா நாடுகளுடன் பல்வேறு சிக்கல்களைத் தீர்க்கப் பாலமாக இருந்திருக்கிறார்.
அணு ஆயுத ஒழிப்பே தனது வாழ்நாள் லட்சியம் என்று கூறுபவர்.
இந்நிலையில், புதிய பிரதமர், அதிகாரபூர்வ வீட்டுக்குக் குடிபுகுந்தார். இதற்கு முந்தைய பிரதமர்களான யோஷிடே சுகா, சின்சோ அபே ஆகியோர் இந்த வீட்டில் தங்குவதைத் தவிர்த்தனர். காரணம் பிரதமரின் அதிகாரபூர்வ மாளிகையில் பேய் இருப்பதாக நம்பப்படுவதே காரணம். 1936 ஆம் ஆண்டு ஜப்பான் அரசைக் கைப்பற்ற ராணுவம் முயற்சித்தது.
அப்போது பிரதமர் மாளிகையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ அதிகாரிகளும், வீரர்களும் பலர் கொலையாகினர். அதன் பின்னரே அந்த மாளிகையில் பேய்கள் இருப்பதாக கதைகள் கட்டப்பட்டன. அதனாலேயே முன்னாள் பிரதமர்கள் அபே, சுகா ஆகியோர் அங்கு தங்குவதைப் புறக்கணித்தனர்.
இந்நிலையில், பல தரப்பினரின் ஆலோசனையையும் மீறி கிஷிடா அந்த மாளிகையில் குடிபுகுந்தார்.
முதல் நாளை அங்கு கழித்த அவர், நான் நேற்று நன்றாக தூங்கினேன். இதுவரை அந்த மாளிகையில் பேய், பிசாசை நான் பார்க்கவில்லை என்று நிருபர்களிடம் கிண்டலாக கூறிச் சென்றார்.