Last Updated : 29 Mar, 2016 07:10 PM

 

Published : 29 Mar 2016 07:10 PM
Last Updated : 29 Mar 2016 07:10 PM

எகிப்து விமானத்தை சைப்ரஸுக்கு கடத்தியவர் கைது: ஊழியர், பயணிகள் பத்திரமாக மீட்பு

சைப்ரஸுக்கு கடத்தப்பட்ட எகிப்து நாட்டு பயணிகள் விமானத்தில் இருந்த ஊழியர்கள், பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதுடன் கடத்தல்காரர் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து எகிப்து விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எகிப்து ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ320 ரக எம்எஸ்181 என்ற விமானம் கடற்கரை நகரமான அலெக்சாண்ட்ரியாவிலிருந்து 21 வெளிநாட்டினர் உட்பட 55 பயணிகளுடன் தலைநகர் கெய்ரோவுக்கு காலையில் புறப்பட்டது.

வழக்கமான வழியில் சென்று கொண்டிருந்த அந்த விமானத்தில் இருந்த ஒருவர் திடீரென பைலட்டின் அறைக்குச் சென்றுள்ளார். அப்போது, விமானத்தை துருக்கி அல்லது சைப்ரஸுக்கு திருப்புமாறும் இல்லாவிட்டால், தனது இடுப்பில் (பெல்ட்) கட்டப்பட்டுள்ள வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துவிடுவேன் என்று பைலட்டை மிரட்டி உள்ளார்.

இதையடுத்து, சைப்ரஸ் தீவில் உள்ள லர்னாகாவில் விமானத்தை தரையிறக்கி உள்ளார் பைலட். பின்னர் கடத்தல்காரருடன் விமான நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில், பெரும்பாலான பயணிகளை வெளியேற கடத்தல்காரர் அனுமதித்துள்ளார்.

எனினும், அந்த விமானத்தின் தலைமை பைலட், துணை பைலட், ஒரு பணிப்பெண், ஒரு பாதுகாவலர் மற்றும் 3 பயணிகள் என மொத்தம் 7 பேரை கடத்தல்காரர் பிடித்து வைத்துள்ளார். அவர்களை மீட்பது குறித்து சைப்ரஸ் நெருக்கடி மைய அதிகாரிகள் கடத்தல்காரருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

இதனிடையே, அந்த விமானத்தை ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் சுற்றி வளைத்தனர். இந்நிலையில் அந்த விமானத்திலிருந்த கடத்தல்காரர் கீழே இறங்கி கையை உயர்த்தியபடி பாதுகாப்புப் படை வீரர்களை நோக்கி நடந்து வந்தார். அவரை பரிசோதித்த அவர்கள் பின்னர் கைது செய்தனர்.

இதையடுத்து விமானத்தில் இருந்த 7 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட நபரின் பெயர் சைப் எல்தின் முஸ்தபா என தெரியவந்துள்ளது. முன்னதாக கடத்தல்காரரின் பெயர் இப்ராஹிம் சமஹா என தகவல் வெளியானது. ஆனால் அவர் பயணி என்பது தெரியவந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை சைப்ரஸ் அரசு செய்தித் தொடர்பாளர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். மேற்கொண்டு எந்தத் தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை.

இந்த சம்பவம் காரணமாக அந்த விமான நிலையம் மூடப்பட்டது. அங்கு தரையிறங்க வேண்டிய விமானங்கள் பபோஸ் விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டன.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சைப்ரஸ் அதிபர் நிகோஸ் அனஸ்தாசியாட்ஸ் எகிப்து அதிபர் அப்துல் படா அல்-சிசியுடன் அவ்வப்போது தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

தீவிரவாத தொடர்பா?

சைப்ரஸ் அதிபர் நிகோஸ் அனஸ்தாசியாட்ஸ் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்த விமான கடத்தலுக்கும் தீவிரவாதத்துக்கும் தொடர்பு இல்லை” என்றார்.

எகிப்து நாட்டைச் சேர்ந்த இப்ராஹிம் சமஹா என்பவர்தான் விமானத்தைக் கடத்தியதாக முதலில் தகவல் வெளியானது. கால்நடை மருத்துவ பல்கலைக்கழக் பேராசிரியரான சமஹா, சைப்ரஸில் வசிக்கும் தனது முன்னாள் காதலியைப் பார்க்க விரும்புவதாக சைப்ரஸ் அதிகாரிகளிடம் தெரிவித்ததாக தகவல் வெளியானது.

இதற்கு முன்பு பல முறை கடத்தப்பட்ட விமானங்கள், இப்போது எகிப்து விமானம் தரையிறக்கப்பட்டுள்ள விமான நிலையத்தில்தான் தரையிறக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரஷ்யாவுக்கு சொந்தமான விமானம் எகிப்தின் சினை பகுதியில் பறந்தபோது வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த 224 பேரும் பலியாயினர். தற்கொலைப்படை தாக்குதல் மூலம் இந்த விமானத்தை வீழ்த்தியதாக ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. இந்நிலையில் எகிப்து விமானம் கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x