

எலி கடித்ததால் ஒரு பெண்ணுக்கு கரோனா பரவ அவர் மூலம் மீண்டும் தைவானில் கரோனா தொற்று வேகமெடுத்துள்ளதாக வெளியான தகவல் குறித்து அந்நாட்டு அரசு தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது.
தைவானின் மிக முக்கியமான ஆய்வு மையங்களில் ஒன்று அகடமியா சினிகா. இங்கு ஆய்வுக் கூடத்தில் பணிபுரிந்து வந்த 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அவர் சமீபத்தில் வெளிநாடுகள் எங்கும் பயணிக்கவில்லை. மேலும் அவர் இரண்டு தவணை மாடர்னா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார்.
ஆனால் அவருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அவரை ஆய்வுக்கூடத்தில் இருந்த கோவிட் பாதித்த எலி கடித்ததாலேயே அவருக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
ஊடகங்கள் இது செய்தியாக இது குறித்து தைவான் அரசாங்கம் விளக்கமளித்துள்ளது. அந்தப் பெண்ணை ஆய்வகத்தில் இருந்த கோவிட் பாதித்த எலி கடித்தது உண்மைதான். ஆனால், அவருக்கு அதனால் கரோனா பரவியுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அந்தப் பெண்ணுக்கு டெல்டா வகை வைரஸே பாதித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 5 ஆம் தேதிக்குப் பின்னர் தைவானில் கரோனா தொற்றே இல்லாமல் இருந்த நிலையில் ஆய்வுக் கூட பெண்ணுக்கு தொற்று ஏற்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை மனிதர்களிடம் இருந்து மட்டுமே விலங்குகளுக்கு கரோனா பரவியுள்ளது. ஒருவேளை விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு கரோனா பரவ ஆரம்பித்தால் அது மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் தைவான் ஆய்வுக் கூட பெண்ணிற்கு எலி மூலம் தான் கரோனா பாதித்ததா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பல தரப்பிலும் கோரிக்கை எழுந்து வருகிறது.
இதுவரை தைவானில் 14,500 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மொத்தம் 848 பேர் உயிரிழந்துள்ளனர்.