

ஆப்கானிஸ்தானின் காபூலுக்கு அனுப்பிய சிறப்பு விமானத்தின் மூலம் ஆப்கன் குடியானவர்கள் உள்பட 110 பேரை இந்தியா மீட்டுள்ளது.
இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) சிறப்பு விமானம் மூலம் மீட்கப்பட்ட சீக்கியர்கள், இந்துக்கள் உள்பட 110 பேர் இந்தியா வந்தடைந்தனர்.
இவர்களுடன் ஆப்கனின் வரலாற்றுச் சிறப்புமிக்க குருத்வாராக்களில் இருந்த மூன்று ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப் நூல்கள், இந்து மத புனித நூலான பகவத் கீதை, இந்து இதிகாசங்களான ராமாயணம், மகாபாரத நூல்கள் ஆகியனவும் விமானத்தில் பத்திரமாகக் கொண்டு வரப்பட்டன.
பகவத் கீதையானது 5 ஆம் நூற்றாண்டு கோயிலான காபூலில் அசமாய் கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.
விமானத்தில் வந்த இந்துக்கள், சீக்கியர்களுடன் ஆப்கானைச் சேர்ந்த சிலரும் அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்கள், காபூலின் ஷோர் பஜார் குருத்வாராவில் காவலராக இருந்த மஹரம் அலியின் குடும்பத்தினர். குருத்வாரா மீதான தாக்குதலின் போது மஹரம் அலி உயிரிழந்தார். ஆகையால் அவரது குடும்பத்தினரை குருத்துவாரா மூலம் இந்தியா அழைத்து வந்துள்ளனர். ஆப்கன் குடியானவர்களான அவர்கள் சோப்தி ஃபவுண்டேஷன் மூலம் இங்கு இந்தியாவில் மறுவாழ்வு அளிகப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஆப்கனில் இருந்து கொண்டு வரப்பட்ட ஸ்ரீ குரு கிராந்த சாஹிப் புனித நூல் மஹாவீர் நகரில் உள்ள குரு அர்ஜன் தேவ் ஜி குருத்வாராவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்து புனித நூல் ஃபரீதாபாத்தில் உள்ள அசாமாய் கோயிலுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தலிபான்களின் வசமான ஆப்கானிஸ்தானில் இருந்து இதுவரை இந்தியர்கள் உள்பட 565 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.