

ரம்ஜான் பண்டிகை தொடங்க உள்ளதை முன்னிட்டு, மலேசியாவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தோனேசியர்களை தாயகத்துக்கு ஏற்றிச் சென்ற படகு மலேசியாவில் கவிழ்ந்ததில் 5 பேர் பலியாகினர். 32 பேரை காணவில்லை.
இதுகுறித்து போர்ட் கிளாங்கில் உள்ள மலேசிய கடற்படை உயர் அதிகாரி முகமது ஹம்பாலி யாகூப் கூறியதாவது:
போர்ட்கிளாங் துறைமுகத்துக்கு அருகே செவ்வாய்க்கிழமை இரவு படகு கவிழ்ந்ததாக தகவல் கிடைத்தது. உடனடியாக அப்பகுதிக்குச் சென்று தண்ணீரில் தத்தளித்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
இந்தப் படகில் குழந்தைகள் உட்பட சுமார் 97 பேர் பயணம் செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் தானாக கரையேறிய சிலரையும் சேர்த்து 60 பேர் உயிருடனும் 5 பேரை சடலமாகவும் மீட்டுள்ளோம்.
இன்னும் 32 பேரைக் காணவில்லை. 5 படகுகள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் உதவியுடன் அவர்களைத் தேடி வருகிறோம். விபத்து நடைபெற்ற பகுதி கடற்கரைக்கு அருகில் இருப்பதால் பெரும்பாலானவர்கள் கரையேறி இருப்பார்கள் என நம்புகிறோம்.
மலேசியா மற்றும் இந்தோனேசி யாவின் சுமத்ரா தீவுக்கிடையே உள்ள மலாக்கா ஜலசந்தி வழியாக சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தபோது விபத்து நேர்ந்ததாக உயிர் தப்பியவர்கள் தெரிவித்தனர். தங்களிடம் பயண ஆவணங்கள் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்றதே இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கக்கூடும் எனத் தெரிகிறது. இதுகுறித்து விசாரணை நடைபெறுகிறது என்றார்.
மலேசியாவில் சுமார் 20 லட்சம் பேர் சட்டவிரோதமாக குடியேறி பணிபுரிகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் இந்தோனேசியர்கள். இவர்கள் ஆண்டுதோறும் ரம்ஜான் பண்டி கைக்காக சொந்த ஊருக்கு செல்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.