ஜூம் மீட்டிங்கில் 900 பேரின் வேலையைப் பறித்த பெட்டர் டாட் காம் சிஇஓ விஷால் கார்க்

விஷால் கார்க்
விஷால் கார்க்
Updated on
1 min read

"நீங்கள் இந்த ஜூம் மீட்டிங்கில் இடம்பெற்றிருந்தீர்கள் என்றால் இன்று நமது நிறுவனத்தில் நடைபெறும் ஆட்குறைப்பில் நீங்களும் ஒருவர். நீங்கள் துரதிர்ஷ்டவசமான குழுவைச் சேர்ந்தவர். " இது தான் 900 பேரை பணி நீக்கம் செய்யும் முன் பெட்டர் டாட் காம் சிஇஓ விஷால் கார்க் கூறியதாவது.

இந்திய அமெரிக்கரான Better.com சிஇஓ விஷால் கார்க் இந்தப் பணி நீக்கத்துக்கான காரணமாக சந்தை நிலவரம், செயல்திறன் ஆகியனவற்றைக் காரணமாகக் கூறியுள்ளார்.

நீங்கள் இந்த மாதிரியான ஒரு தகவலைக் கேட்க விரும்பாமல் இருக்கலாம். ஆனால், நீங்கள் இந்த ஜூம் மீட்டிங்கில் இடம்பெற்றிருந்தீர்கள் என்றால் இன்று நமது நிறுவனத்தில் நடைபெறும் ஆட்குறைப்பில் நீங்களும் ஒருவர். நீங்கள் துரதிர்ஷ்டவசமான குழுவைச் சேர்ந்தவர். ஆம் இந்த மீட்டிங்கில் கலந்து கொண்டுள்ள 900 பேரும் பணி நீக்கம் செய்யப்படுகிறீர்கள் என்று கூறியுள்ளார். பெட்டர் டாட் காமின் ஊழியர்களில் இவர்கள் 9% ஆவர். விஷால் கார்க் இரக்கமின்றி வெளியிட்ட இந்த அறிவிப்பை ஊழியர் ஒருவர் பதிவு செய்து அதை சமூக வலைதளத்தில் வைரலாக்கினார். இப்போது விஷால் கார்கை இணையவாசிகள் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த பணி நீக்கம் குறித்து டெய்லி மெயில் பத்திரிகைக்கு விஷால் கார்க் அளித்துள்ள பேட்டியில், 3 நிமிட மீட்டிங்கில் 900 பேரை பணி நீக்கம் செய்வது என்பது மிகவும் சவாலான ஒரு விஷயம். இதை நான் இரண்டாவது முறையாக செய்கிறேன். முதன்முறை நான் அழுது தீர்த்தேன். இப்போது, தைரியமாக இருப்பேன் என நம்புகிறேன்.

ஊழியர்களில் சிலர் சோம்பேறியாகவும், ஆக்கபூர்வமாக இல்லாததாலுமே இந்த நடவடிக்கையை மேற்கொள்ள நேர்ந்தது. சுமார் 250 ஊழியர்கள் வெறும் 2 மணி நேரம் மட்டுமே வேலை செய்வது தெரியவந்துள்ளது. அவர்கள் பெட்டர் டாட் காம் வாடிக்கையாளர்களின் பணத்தை மறைமுகமாக திருடுகிறார்கள். வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட பணம் தானே இவர்கள் சம்பளமாகப் பெற்றார்கள் என்று கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாகவும் இவ்வாறான அநாகரிகமான பணிநீக்கத்துக்காக பெயர் பெற்றவர்தான் விஷால் கார்க். ஒரு முறை அவர் ஊழியர்களுக்கு அனுப்பிய இ மெயில் ஃபோர்ப்ஸ் பத்திரிகைக்கு கிடைத்தது.

அந்த மெயிலில் அவர், நீங்கள் படு மந்தமாக இருக்கிறீர்கள். மந்தமான டால்பின்கள் எனக்கு வேண்டாம். நீங்கள் என்னை தர்மசங்கடத்துக்கு ஆளாக்குறீர்கள். உங்கள் பணியை இத்தோடு முடித்துக் கொள்ளுங்கள் என்று அந்த மெயிலில் குறிப்பிட்டிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in