Published : 05 Dec 2021 04:06 AM
Last Updated : 05 Dec 2021 04:06 AM

ரோபோக்கள் இனிமேல் குழந்தைகளை பெற்றெடுக்கும்: உலகின் முதல் உயிருள்ள ரோபோக்களை உருவாக்கி அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை

ஜீனோபாட்ஸ் 3.0 உயிரி ரோபோ

வாஷிங்டன்

உலகின் முதல் உயிருள்ள ரோபோவை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த ரோபோக்கள் தங்களை போன்றே குழந்தைகளை பெற்றெடுக்கின்றன. அமெரிக்காவின் வெர்மாண்ட், டப்ட்ஸ்,ஹார்வர்டு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக உயிரி ரோபோ ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2020-ம் ஆண்டில் உலகின் முதல் உயிருள்ள ரோபோவை அவர்கள் உருவாக்கினர்.

ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஜீனோபஸ் லேவிஸ் என்ற தவளை இனத்தின் ஸ்டெம் செல்களில் இருந்து உருவாக்கியதால் இதற்கு 'ஜீனோபாட்ஸ் 1.0' என்று பெயரிடப்பட்டது. இவை ஒரு மில்லி மீட்டருக்கும் குறைவான அகலம் கொண்டவை. பேக் மேன் வடிவிலான இந்த ரோபோக்களால் நகர முடியும். நீந்த முடியும்.

தொடர் ஆராய்ச்சியின் பலனாக கடந்த மே மாதம் ஜீனோபாட்ஸ் 2.0 ரோபோ உருவாக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு ஜீனோபாட்ஸ் 3.0 ரோபோ குறித்த ஆய்வறிக்கையை அமெரிக்க விஞ்ஞானிகள் வெளியிட்டனர். அதில் கூறியிருப்பதாவது:

உலகின் பல்வேறு நாடுகளில் இரும்பு, பிளாஸ்டிக்கால் ரோபோக்கள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் இருந்து வேறுபட்டு உயிரி ரோபோக்களை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றிருக்கிறோம். இப்போது ஜீனோபாட்ஸ் 3.0 ரோபாவை உருவாக்கியுள்ளோம். இவற்றால் தங்களைப் போன்றே குழந்தைகளை பெற்றெடுக்க முடியும். இந்த ரோபோ ஆராய்ச்சியின் மூலம் விபத்தில் படுகாயமடைந்த மனிதர்களை குணப்படுத்த முடியும். பிறவி குறைபாடுகள், புற்றுநோயை குணப்படுத்த முடியும். முதுமை பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும் என்று நம்புகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஜீனோபாட்ஸ் 3.0 ரோபாவை உருவாக்கியவிஞ்ஞானிகள் குழுவில் இடம்பெற்றுள்ள டப்ட்ஸ்பல்கலைக்கழக விஞ்ஞானி பிளாகிஸ்தான் கூறும்போது, "ஆய்வகத்தில் ஒரு ஜீனோபாட்ஸ் ரோபோ குழந்தையை பெற்றெடுக்க 5 நாட்கள் ஆகிறது. இதுவும் அச்சு, அசல் ஜீனோபாட்ஸ் ரோபோ போன்றே இருக்கிறது. எதிர்காலத்தில் அணுக் கழிவு, கடலில் சேகரமாகும் மைக்ரோபிளாஸ்டிக் கழிவு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஜீனோபாட்ஸ் ரோபோவை பயன்படுத்த முடியும்" என்றார்

ஆபத்தான ரோபோ?

அமெரிக்காவின் டூக் பல்கலைக்கழக பேராசிரியர் நிடா பாராஹனி கூறும்போது, "ஜீனோபாட்ஸ் ரோபோவால் தன்னைப் போன்றே குழந்தையை பெற்றெடுக்க முடியும் என்றால் அது ஆபத்தானது. இவை ஆய்வகத்தில் இருந்து தப்பி பூமியில் பல்கிப் பெருக வாய்ப்புள்ளது. எதிர்காலத்தில் இவற்றின் இனப்பெருக்கம், செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பதை கணிக்க முடியாது. செயற்கையாக உருவாக்கப்பட்ட உயிரி ரோபாவால் மனித குலத்துக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே ஆபத்தான ஆராய்ச்சியை நிறுத்த வேண்டும். மனித குலத்தின் நன்மைக்காக அனைத்து உயிரி ரோபோக்களையும் அழித்துவிட வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x