

கரோனா கடந்த 2019 டிசம்பர் முதல் உலகை அச்சுறுத்தி வருகிறது. ஆனால், இரண்டாண்டுகளுக்குப் பின்னர் இப்போது தான், குக் தீவுகள் முதல் முறையாக கரோனா தொற்று பதிவாகியுள்ளது.
தெற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ளது தி குக் ஐலாண்ட்ஸ் எனும் தீவு தேசம். இந்த தேசத்தின் மொத்த மக்கள் தொகையே வெறும் 17,000 தான். இந்த நாட்டில் 96% மக்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் முதன் முறையாக 10 வயது சிறுவன் ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. நியூசிலாந்து நாட்டில் இருந்து அகதிகளுக்கான விமானத்தின் தனது குடும்பத்துடன் அந்த சிறுவன் கடந்த டிச.2 ஆம் தேதி தான் குக் தீவுகளுக்கு வந்தார். அப்போது மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இருந்தது உறுதியாகியுள்ளது.
இது குறித்து அந்நாட்டின் பிரதமர் மார்க் பிரவுன் கூறுகையில், "நாங்கள் எங்கள் நாட்டின் எல்லைகளை திறப்பது குறித்து ஆலோசித்துக் கொண்டிருந்தோம். ஆனால், இப்போது எல்லையின் வழியாக இந்த தொற்றாளர் வந்துள்ளார். இது சோதனையான காலம்" என்றார்.