

விடுதலைப் போராட்ட வீரர் பகத் சிங் தூக்கிலிடப்பட்டதற்கு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், பகத் சிங் வம்சாவழியினருக்கு நிதியளிக்க வேண்டும் என்றும் இவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பகத் சிங்கின் 85-வது நினைவு தினத்தையொட்டி இவர்கள் இதனை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
இது குறித்து இரண்டு நினைவு தின நிகழ்ச்சிகள் பாகிஸ்தானில் நடைபெற்றது. முதல் நிகழ்ச்சி பைசலாபாத்தில் பகத் சிங் பிறந்த இடத்தில் நடைபெற்றது. இதில் பலதரப்பினரும் கலந்து கொண்டு பகத் சிங்கிற்கு செறிவான அஞ்சலிகளை செலுத்தினர்.
2-வது நிகழ்ச்சி பகத் சிங் தூக்கிலிடப்பட்ட ஷத்மான் சவுக்கில் நடைபெற்றது. இங்குதான் பகத்சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகியோர் 1931-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி தூக்கிலிடப்பட்டனர்.
பகத்சிங்கிற்கு முதலில் ஆயுள் தண்டனையே அளிக்கப்பட்டது, பிறகு ‘ஜோடிக்கப்பட்ட’ வழக்கு ஒன்றில் மரண தண்டனை விதிக்கப்பட்டது என்று மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து பாகிஸ்தான் மனித உரிமை செயல்பாட்டாளர், அப்துல்லா மாலிக் கூறும்போது, “இஸ்லாமாபாத்தில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்திடம் இந்த தீர்மானத்தை சமர்பிக்கவுள்ளோம்.
பிரிட்டன் அரசுடன் இது குறித்து போராடவும் முடிவு செய்துள்ளோம், பகத் சிங் தூக்கிலிடப்பட்டதற்கு ராணி எலிசபெத் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.
ஷத்மான் சவுக் நிகழ்ச்சிக்கு, தீவிரவாதிகள் மிரட்டல் இருந்ததால் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. அதாவது ஷத்மான் சவுக் பகுதியை பகத்சிங் சவுக் என்று மாற்ற வேண்டும் என்று பகத்சிங் அறக்கட்டளையினர் கோரிக்கை வைத்துள்ளனர், மாறாக ஜமா உத் தவா இயக்கத்தின் கிளை அமைப்பான ஹர்மத்-இ-ரசூல் இயக்கத்தினர் ஹர்மத் சவுக் என்று பெயரிட வேண்டுமென்று கோரி வருகின்றனர்.
இது குறித்த் இக்பால் விர்க் என்பவர் கூறும்போது, பகத்சிங்கின் பெயர் நாட்டின் இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று வருவதாகவும் இதனால் பகத் சிங் மற்றும் அவருடன் தூக்கிலிடப்பட்டவர்கள் குறித்த வாழ்க்கை, போராட்ட விவரங்களை தன்னிடம் கேட்டு வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.
“மார்ச் 23-ம் தேதி (பாகிஸ்தான் தினம்) அன்று பகத்சிங்கிற்கு மரியாதை செலுத்தும் விதமாக பாகிஸ்தான் அரசு சில நிகழ்ச்சிகளை நடத்த கோரிக்கை வைத்துள்ளோம். ஏனெனில் அவர்தான் விடுதலைக்கு வழிவகுத்தவர்” என்றார்.