

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தொற்று பிரேசிலிலும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே பிரேசிலில் தான் முதன்முதலாக தொற்று உறுதியானது.
ஒமைக்ரானால் தென்னாப்பிரிக்காவில் 300% அளவுக்கு கரோனா பரவல் அதிகரித்துள்ளது. ஒரு வாரத்துக்குள் போட்ஸ்வானா, பிரிட்டன், ஜெர்மனி, நெதர்லாந்து, டென்மார்க், பெல்ஜியம், இஸ்ரேல், இத்தாலி, செக் குடியரசு, ஹாங்காங், ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான் உட்பட பல்வேறு நாடுகளுக்கு ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது. ஒமைக்ரான் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தென்னாப்பிரிக்கா உடனான விமான சேவையை பல்வேறு நாடுகள் ரத்து செய்துள்ளன.
இந்நிலையில், லத்தீன் அமெரிக்க நாடான பிரேசிலிலும் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து சாவ் பாவ்லோவுக்கு தனது மனைவியுடன் வந்த ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கணவர், மனைவி இருவருக்குமே ஒமைக்ரான் வகை வைரஸ் தாக்கியுள்ளது உறுதியானது. இதனையடுத்து அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கிறிஸ்துமஸ் பரிசா?
ஒமைக்ரான் வைரஸ் குறித்து பல்வேறு எதிர்மறை தகவல் பரவி வரும் சூழலில் ஜெர்மனியைச் சேர்ந்த தொற்றுநோய் நிபுணர் கார்ல் கூறியதாவது: தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாகப் பரவினாலும், அந்த நாட்டில் வைரஸ்பாதிப்பால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது.பெரும்பாலும் உயிரிழப்பு இல்லை. தற்போது உலகம் முழுவதும் டெல்டா வகை வைரஸ் வியாபித்து பரவியுள்ளது. ஒமைக்ரான் வைரஸால் டெல்டா வைரஸ் பரவல் குறையும் என்று எதிர்பார்க்கிறோம். நோயாளிகளுக்கு பெரிய பாதிப்பு இல்லை என்பதால் ஒமைக்ரான் வைரஸை கிறிஸ்துமஸ் பரிசாக கருதுகிறோம். இந்த வைரஸ் பரவல் நன்மையில் முடியலாம் .இவ்வாறு அவர் தெரிவித்தார்.