Last Updated : 21 Mar, 2016 04:40 PM

 

Published : 21 Mar 2016 04:40 PM
Last Updated : 21 Mar 2016 04:40 PM

அமெரிக்காவுக்கு புளூட்டோனியம் கொண்டு செல்லும் பிரிட்டன் கப்பல்கள் ஜப்பான் வந்தன

சுமார் 12 அணுகுண்டுகளைத் தயாரிக்கவல்ல புளூட்டோனியம் என்ற அணுப்பொருளை அமெரிக்காவுக்கு கொண்டு செல்லும் திட்டத்தின் படி 2 பிரிட்டன் கப்பல்கள் ஜப்பான் வந்து சேர்ந்தன.

இருதரப்பு ஒப்பந்தங்களின் படி இந்த புளூட்டோனியம் கொண்டு செல்லப்படுகிறது. வடகிழக்கு டோக்கியோவில் உள்ள கடற்கரை கிராமமான டோகாய்க்கு பிரிட்டன் கப்பல்கள் வந்து சேர்ந்தன.

இந்த இடத்தில்தான் ஜப்பானின் அணு ஆராய்ச்சி மையம் உள்ளது. ஜப்பான் அணு ஆற்றல் முகமை இதுகுறித்து கூறும்போது, கப்பல்களில் புளூட்டோனியம் அடங்கிய பீப்பாய்களை கப்பலில் ஏற்ற பல மணி நேரங்கள் ஆகும். உச்சகட்ட பாதுகாப்பையும் உறுதிசெய்வது அவசியம் என்று கூறியுள்ளது.

பசிபிக் நியூக்ளியர் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் தி பசிபிக் ஈக்ரட், பசிபிக் ஹெரான் ஆகிய கப்பல்கள் 331 கிலோ புளூட்டோனியத்தை அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ள அணு ஆராய்ச்சி மையத்திற்கு எடுத்துச் செல்கிறது. இந்தப் புளூட்டோனியம் பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து ஆராய்ச்சிக்காக ஜப்பானுக்கு அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு காரணங்கள் கருதி ஜப்பான் அரசு அதிகாரிகள் இது குறித்த விவரங்களை அளிக்க மறுத்து விட்டனர்.

ஜப்பானின் எரிபொருள் மின் உற்பத்தித் திட்டத்துக்காக புளூட்டோனியம் அங்கு தேவைப்பட்டு வருகிறது. இதனால் சுமார் 11 மெட்ரிக் டன்கள் புளூட்டோனியம் ஜப்பானில் குவிந்துள்ளது. மேலும் 36 டன் புளூட்டோனியம் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தில் ரீ-புராசஸிங் நிலையில் உள்ளது. இதுவும் இருதரப்பு ஒப்பந்தங்களின் படி ஜப்பானுக்கு அனுப்பக் காத்திருப்பில் உள்ளது. இந்த புளூடோனியம் இருப்பின் மூலம் சுமார் 6,000 அணுகுண்டுகளைத் தயாரிக்க முடியும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

மின் உற்பத்திக்காகவே ஜப்பான் புளூட்டோனியத்தை ‘ஸ்டாக்’ செய்து வருகிறது, ஆனால் இதுவும் ஆபத்தானதே என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஜப்பானில் உள்ள மோஞ்சு புளூட்டோனியம் எரிப்பு அணு உலை 20 ஆண்டுகளாக செயல்படவில்லை. தற்போது பாதுகாப்பு அச்சம் காரணமாக இதனை மூடிவிடவும் ஜப்பான் பரிசீலித்து வருகிறது. ஜப்பானின் 43 அணு உலைகளில் 2 மட்டுமே தற்போது செயல்பாட்டில் உள்ளன. புகுஷிமா அணுக்கசிவு நெருக்கடிக்குப் பிறகே ஜப்பான் பெரிதும் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x