Published : 27 Nov 2021 06:14 PM
Last Updated : 27 Nov 2021 06:14 PM

‘‘தண்டித்து விடாதீர்கள்’’- ஒமிக்ரான்  வைரஸ் கண்டுபிடிப்பு; தென் ஆப்ரிக்கா ஆதங்கம்

ஜோகனஸ்பெர்க்

ஒமிக்ரான் வைரஸ் கண்டபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இதனை கூறியதற்காக பாராட்ட வேண்டும், தண்டித்து விடாதீர்கள் என தென் ஆப்ரிக்கா உலக நாடுகளுக்கு தனது கவலையை பதிவு செய்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில்தான் கடந்த 24-ம் தேதி முதல் முறையாக B.1.1.529 என்றழைக்கப்படும் 50 உருமாற்றம் கொண்ட புதிய கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த புதிய கரோனா திரிபு வைரஸுக்கு உலக சுகாதார அமைப்பு ஒமிக்ரான் (Omicron) என்ற புதிய கிரேக்க பெயரை சூட்டி உள்ளது.

அதன்பின் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது.

இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாகவும் இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

ஒமிக்ரான் வைரஸ் அச்சத்தால் அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அதேபோன்று இந்தியாவும், தென் ஆப்பிரிக்கா, தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்குக் கட்டுப்பாடுகளை விதிப்பது, அல்லது விமானங்களைத் தடை செய்வது குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

ஹாங்காங், இஸ்ரேலில் இருந்துவரும் பயணிகளுக்குக் கூடுதலான பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும், குறிப்பாக இந்தியாவுக்கு வந்தபின் அந்தப் பயணிகளுக்கு கரோனா பரிசோதனையும், தனிமைப்படுத்துதலும் இருக்கும் எனத் தெரிகிறது.

இந்தநிலையில் ஒமிக்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதால் தங்கள் நாட்டை பற்றி தவறான பிரச்சாரம் செய்யப்படுவதாக தென் ஆப்ரிக்கா கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ஒமிக்ரான் வைரஸ் தென்னாப்பிரிக்காவுடன் சமீபத்திய தொடர்புகளைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவிற்குப் பிறகு இஸ்ரேலும் பெல்ஜியமும் ஓமிக்ரான் வைரஸ் கண்டறிந்ததாக அறிவித்துள்ளன. அந்த நாடுகளுக்கான எதிர்வினை தென்னாப்பிரிக்காவில் உள்ள வைரஸ் என மையப்படுத்தி கூறப்படுகிறது.

தென்னாப்பிரிக்காவின் சோதனை திறன் மற்றும் உலகத் தரம் வாய்ந்த அறிவியல் சமூகத்தால் அங்கீகரிக்கப்படுகிறது. தொற்றுநோயை கட்டுப்படுத்துவதில் உலக நாடுகளை போலவே நாங்களும் சிறந்த முறையில் முன்னுதாரணமாக இருந்தோம். அதிகஅளவு தடுப்பூசி செலுத்தி வருகிறோம். எங்கள் நாட்டில் இதுபோன்ற புதிய வைரஸ் இருப்பதையும் அறிவித்தோம். எங்கள் இந்த நடவடிக்கையை பாராட்ட வேண்டும், தண்டிக்கக்கூடாது.

உலகின் பிற பகுதிகளில் புதிய மாறுபாடு கொண்ட கரோன வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதையாரும் மறுந்து விடக்கூடாது. அந்த வைரஸ் ஒவ்வொன்றும் தென்னாப்பிரிக்காவுடன் சமீபத்திய தொடர்புகளைக் கொண்டிருக்கவில்லை. இதையும் உலக சமூகம் மனதில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x