Published : 27 Nov 2021 07:56 AM
Last Updated : 27 Nov 2021 07:56 AM

புதிய வகை கரோனா வைரஸ்: தென் ஆப்பிரிக்கா உள்பட 7 நாடுகளுக்கு பயணிக்க அமெரி்க்கா கட்டுப்பாடுகள்


தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதையடுத்து, 7 நாடுகளுக்கு பயணிக்கவும், அங்கிருந்து பயணிகள் வரவும் அமெரிக்கா நாளை முதல் கடும் கட்டுப்பாடுகளை கொண்டுவருகிறது

தென் ஆப்பிரிக்காவில் பி.1.1.529 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் முதலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாக இந்த வைரஸ் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். முதன் முதலில் இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் கடந்த வாரம் கண்டறியப்பட்டது.

இ்ந்த புதிய வைரஸ் ஏற்கெனவே அண்டை நாடுகளுக்குப் பரவிவிட்ட நிலையில் மேலும் பல நாடுகளுக்கும் பரவியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. குறிப்பாக போட்ஸ்வானா நாட்டில் இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு கூட இந்த புதிய வைரஸ் தாக்கியுள்ளது.

இந்த புதிய வகை வைரஸ் குறித்து முழுமையாக தெரியாத நிலையில், அறிவியல் வல்லுநர்கள் பெரிதும் அச்சப்படுகிறார்கள். இந்த வகை வைரஸ், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டவை, வேகமாகப் பரவும், கரோனாவின் அறிகுறிகளும் தீவரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

தென் ஆப்பிரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்கா மண்டலத்தில் உள்ள பல்வேறு நாடுகளில் இருந்து வருவோருக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகள், கனடா, பிரிட்டன் ஏற்கெனவே தடை விதித்துள்ளன. இந்நிலையில் அமெரிக்காவும் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 7 நாடுகளி்ல் இருந்து வருவோருக்குத் தடை விதித்துள்ளது.

வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோனி ஃபாஸி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “ புதிய வகை வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதால், தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, நமிபியா, லெசோதோ, எஸ்வாதினி, மொசாம்பிக், மலாவி ஆகிய நாடுகளில் இருந்து பயணிகள் அமெரிக்கா வருவதற்கு கடும் கட்டுப்பாடுகள் திங்கள்கிழமை முதல் விதிக்கப்படும்.இந்த கட்டுப்பாடுகள், தடைகள் எத்தனை நாட்களுக்கு இருக்கும் எனத் தெரியாது. இந்த 7 நாடுகளில் இருந்து வரும் அமெரிக்க மக்களுக்கும், அமெரிக்காவில் வசிப்போருக்கும் கட்டுப்பாடுகள் இருக்காது. அவர்களுக்கு பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் மட்டும் இருக்கும் ” எனத் தெரிவித்தார்

அமெரிக்க அதிபர் ஜோ பிடன் நிருபர்களிடம் கூறுகையில் “ தென் ஆப்பிரிக்காவில்கண்டறியப்பட்ட புதிய வகை கரோனா வைரஸ், வீரியம்மிகுந்ததாக இருப்பதால், நாங்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது. இந்த வைரஸ் அதிகவேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது, ஆனாலும் முழுமையாக இதைப் பற்றித் தெரியவில்லை” எனத் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x