Published : 27 Nov 2021 03:07 AM
Last Updated : 27 Nov 2021 03:07 AM

தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது வேகமாக பரவும் தன்மை கொண்டது; உலகை அச்சுறுத்தும் புதிய கரோனா வைரஸ்; வெளிநாட்டு பயணிகளை தீவிரமாக பரிசோதிக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

தலைநகர் டெல்லியில் அதிக அளவில் உள்நாடு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் வந்து செல்வதால், பொது இடங்களில் அவ்வப்போது கரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இதன்படி அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பயணிகளுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.படம்: சிவகுமார் புஷ்பாகர்

புதுடெல்லி

தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை கரோனா வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ்வேகமாக பரவும் தன்மை கொண்டது. எனவே, இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளை தீவிரமாகபரிசோதிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹானில் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அங்கிருந்து உலகம் முழுவதும் வைரஸ்பரவியது. 2 அலை கரோனா வைரஸ்பரவலால் உலகமே கடுமையான பாதிப்பை சந்தித்தது. மேலும், கரோனாவின் மரபணு தொடர்ந்து உருமாறி புதிய வகை வைரஸ்கள் உருவாகி வருகின்றன. இதில் ஒன்றான கரோனாவின் டெல்டா வைரஸ், 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

10,549 பேருக்கு கரோனா

வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 10,549 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையும் சேர்த்து கரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,45,55,431 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 9,868 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,39,77,830 ஆக உள்ளது. தற்போது 1,10,133 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் நாடு முழுவதும் 488 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் மட்டும் 384 பேர் இறந்துள்ளனர். இதுவரை மொத்தமாக இந்தியாவில் 4,67,468 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வேகமாக பரவும் வைரஸ்

இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் தற்போது மரபணு மாறிய புதிய வகை கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸில் 50 வகையான மரபணு மாற்றங்கள் காணப்படுகிறது. இதுதடுப்பூசியின் வீரியத்தை 40 சதவீதம்வரை குறைக்கும் தன்மை கொண்டிருப்பதால் உலக நாடுகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன. தென்னாப்பிரிக்காவில் இருந்து நமீபியா, போட்ஸ்வானா உள்ளிட்ட இதர ஆப்பிரிக்க நாடுகளுக்கும் புதிய வகை கரோனாவைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இஸ்ரேல், பெல்ஜியம், சீனாவின் ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளிலும் தென்னாப்பிரிக்க வகை கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இஸ்ரேல், சிங்கப்பூர், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் தென்னாப்பிரிக்கா உடனான விமான சேவைகளை ரத்துசெய்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியமும் தென்னாப்பிரிக்க விமானசேவைகளுக்கு தடை விதிக்க பரிசீலித்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக பரிசோதித்து வருகின்றன.

உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பப் பிரிவு தலைவர்மரியா கூறும்போது, ‘‘ஒரு வாரத்துக்கு முன்பாக தென்னாப்பிரிக்க வகை கரோனா வைரஸ் கண்டயறியப்பட்டது. இந்த வைரஸ் குறித்துபல்வேறு ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். அதற்கு சில வாரங்கள் தேவைப்படும். அதன்பிறகே வைரஸ் குறித்த முழுமையான விவரங்களை வெளியிட முடியும். புதிய வைரஸுக்கு விரைவில் பெயர்சூட்டப்படும்’’ என்று தெரிவித்தார்.

புதிய கரோனா வைரஸ் குறித்துலண்டனைச் சேர்ந்த யுசிஎல் மரபணுஆய்வுக் கூடம் வெளியிட்ட அறிக்கையில், ‘தென்னாப்பிரிக்காவில் 82 லட்சம் எச்ஐவி நோயாளிகள் உள்ளனர். இதற்கு முன்பு கரோனாவின் பீட்டா வகை வைரஸ் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த எச்ஐவி நோயாளியிடம் இருந்து உருவானது. இதேபோல அந்த நாட்டில்தற்போது பரவும் புதிய வகை கரோனா வைரஸும் எச்ஐவி நோயாளியிடம் இருந்து உருவாகிஇருக்கலாம் என்று கருதுகிறோம். புதிய வைரஸ், டெல்டா வைரஸைவிட அதிவேகமாகப் பரவும் தன்மை கொண்டது. இதுகுறித்து மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் சுகாதாரத்துறை அமைச்சர் சாஜித் ஜாவித் கூறும்போது, ‘‘தென்னாப்பிரிக்காவில் 24 சதவீதம் பேருக்கு மட்டுமே 2 தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அந்த நாட்டில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவுவதற்கான அபாயம் உள்ளது. இதை கருத்தில்கொண்டு தென்னாப்பிரிக்கா உட்பட 6 ஆப்பிரிக்க நாடுகளுடனான விமானசேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம்’’ என்று தெரிவித்தார்.

மத்திய அரசு உத்தரவு

இந்தச் சூழலில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண்,அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தென்னாப்பிரிக்க வகை கரோனாவைரஸ் போட்ஸ்வானா, ஹாங்காங் உள்ளிட்ட பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதில் பல்வேறுமரபணு மாற்றங்கள் காணப்படுகின்றன. இந்தியாவில் விசா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களை தீவிரமாக பரிசோதிக்க வேண்டும்.

குறிப்பாக, தென்னாப்பிரிக்க வகை வைரஸ் பரவல் காணப்படும் நாடுகளில் இருந்து வருவோரை மிக தீவிரமாக பரிசோதிக்க வேண்டும். அவர்களின் முகவரி குறித்த முழுமையான விவரங்களை சேகரிக்க வேண்டும். புதிய வகை வைரஸ் குறித்து மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்கா மட்டுமன்றி புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ள இஸ்ரேல், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தொடர்பாகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சர்வதேச சுகாதாரத்துறை வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தென்னாப்பிரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உலகம் முழுவதும் மரபணு மாறிய கரோனா வைரஸ்கள் பரவி வருகின்றன. தென்னாப்பிரிக்க வகை வைரஸ் குறித்து பீதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுக்காத நிலையில் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அவசரகதியில் முடிவெடுத்து விமான சேவையை ரத்து செய்துள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பு நடைமுறை

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானான் கேப்ரியாசஸ் கூறியதாவது:

கரோனா வைரஸ் ஓய்ந்துவிட்டது. இரு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கும் என்று வதந்திகள் பரவி வருகின்றன. கரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஓயவில்லை. தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் வைரஸ் தொற்றின் பாதிப்பை குறைக்க முடியும். உயிரிழப்பை தடுக்க முடியும்.

எனவே, இரு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களும் பாதுகாப்பு நடைமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கூட்ட நெரிசலான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். அடிக்கடி சோப்பு போட்டுகைகளை கழுவ வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x