Published : 26 Nov 2021 03:46 PM
Last Updated : 26 Nov 2021 03:46 PM

ஐரோப்பாவில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா: ஜெர்மனியில் 76 ஆயிரம் பேருக்கு தொற்று; உயிரிழப்பு ஒரு லட்சத்தைக் கடந்தது

ஜெர்மன் பிரதமர் ஏஞ்செலா மெர்க்கல் | கோப்புப்படம்

பெர்லின்

ஐரோப்பிய நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜெர்மனியில் கடந்த 24 மணிநேரத்தில் 76,414 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது, உயிரிழப்பும் ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.

ஜெர்மனியில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 56 லட்சத்து 50 ஆயிரத்து 170ஆக அதிகரித்துள்ளது, கடந்த 24 மணிநேரத்தில் 357 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில வாரங்களாகவே கரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. சில நாடுகளில் 3-வது அலையும், சில நாடுகளில் 4-வது அலையும் ஏற்பட்டது. ஜெர்மனியில் தற்போது ஏற்பட்டிருப்பது 4-வது அலையாகும்.

ஜெர்மன் பிரதமர் ஏஞ்செலா மெர்க்கல் நேற்று ஊடங்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் “ ஜெர்மனியில் கரோனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் மேல் கடந்துவிட்டது மிகுந்த வேதனையளிக்கிறது. ஐரோப்பாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளைச் சந்தித்த நாடுகள் பட்டியலில் ஜெர்மனியும் சேர்ந்துள்ளது வருந்தக்கூடியது. ரஷ்யா, பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ் நாடுகளில் ஒரு லட்சம் உயிரிழப்பு கடந்துவிட்டது.

ஜெர்மனியில் நாள்தோறும் 300 பேர் கரோனாவில் உயிரிழந்துவருகிறார்கள். கரோனாவில் பாதிக்கப்பட்டால் எத்தனைபேரால் சராசரியாகத் தப்பிக்க முடியும் என்று எங்களுக்குத் தெரியும். இந்த சூழல் ஆபத்தான நிலையை நோக்கிச் செல்கிறது. இன்று கரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள் ஏற்கெனவே பாதிக்கப்பட்டு, 10 நாட்கள்வரை ஐசியூ சிகிச்சையில் இருந்து உயிர்தப்பியவர்கள்தான். சில வாரங்களுக்கு முன் மருத்துவமனைகளில் காலியாக இருந்த படுக்கைகள் நிரம்பி வருகின்றன. ” எனத் தெரிவித்தார்.

இதில் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கரோனா வைரஸான பி.11.1.58 வகையும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிவேகமாகப் பரவும், தடுப்பூசி மூலம் கிடைத்த நோய் எதிர்ப்புச் சக்தியையும் எதிர்க்கும் தன்மை கொண்டது என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

பிரிட்டனில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 47,240 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், பிரிட்டனில் தடுப்பூசி செலுத்திய மக்களின் அளவு அதிகம். அங்கு பெரும்பாலான மக்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி,பூஸ்டரும் 37 சதவீத மக்கள் செலுத்திவிட்டனர். இதனால் பிரிட்டனில் உயிரிழப்புக் கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அங்கு 147 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 34,460 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டனர், 1,238 பேர் உயிரிழந்தனர். பிரான்ஸில் கடந்த 24 மணிநேரத்தில் 33 ஆயிரத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டாலும் தடுப்பூசி செலுத்தியதன் விளைவாக உயிரிழந்தார் எண்ணிக்கை 45 ஆக மட்டுமே இருக்கிறது.

இதேபோல துருக்கியில் 24 ஆயிரம் பேர், அமெரிக்காவில் 27 ஆயிரம் பேர் என கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர், உக்ரைனில் 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனாவில் கடந்த 24 மணிநேரத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x