Published : 26 Nov 2021 11:11 AM
Last Updated : 26 Nov 2021 11:11 AM

தெ.ஆப்பிரிக்காவில் புதியவகை கரோனா வைரஸ்: 6 நாடுகளுக்கு பிரிட்டன் திடீர் தடை

பிரதிநிதித்துவப்படம்

லண்டன்

தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை கரோனா வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து, தென் ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள 6 நாடுகளுக்குத் தடை விதித்து பிரிட்டன் உத்தரவிட்டுள்ளது.

பிரிட்டனில் கரோனா தொற்றின் 2 அலைகள் வந்து ஓய்ந்துவிட்ட நிலையில் 3-வது அலை தொடங்கியுள்ளது. பிரிட்டனில் உள்ள பெரும்பாலான மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தியும்கூட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாள்தோறும் 40 ஆயிரத்துக்கும் குறைவில்லாமல் மக்கள் புதிதாக கரோனாவில் பாதிக்கப்படுகிறார்கள்.

கரோனா தொற்றுக்கு ஆளாகுபவர்கள் பெரும்பாலும் 12 வயதுக்கு மேற்பட்டவர்கள், இரு டோஸ் தடுப்பூசி செலுத்தியும் கரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். மக்கள் தொகையில் 29 சதவீதம் பேர் 3-வது டோஸ் செலுத்தியும் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டிலிருந்து இப்போதுவரை பிரிட்டனில் 1.44 லட்சம் பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அந்த மண்டல நாடுகளில் இருந்து வருவோருக்கு பிரிட்டன் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து பிரிட்டனின் சுகாதாரத்துறைச் செயலர் சஜித் ஜாவித் வெளியிட்ட அறிக்கையில், “தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கரோனா வைரஸ், டெல்டா வகை வைரஸைவிட வீரியம் மிகுந்ததாக இருக்கிறது. தடுப்பூசிகளையும் எதிர்க்கும் திறன் மிகுந்ததாக இருக்கிறது. வேகமாகப் பரவும் தன்மை கொண்டிருக்கிறது. ஆதலால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை தென் ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள 6 நாடுகளில் இருந்து வருவோருக்குத் தடை விதிக்கப்படுகிறது.

இதன்படி, தென் ஆப்பிரிக்கா, நமிபியா, லெசோதோ, எஸ்வாதினி, ஜிம்பாப்வே, போட்ஸ்வானா ஆகிய நாடுகளில் இருந்து பிரிட்டனுக்கு வருவதற்குத் தடை விதிக்கப்படுகிறது. இந்த நாடுகளில் இருந்து வருவோர் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்படுவார்கள். இந்த உத்தரவுக்கு முன் வந்தவர்கள், வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டு 2-வது நாள் மற்றும் 8-வது நாளில் பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். கடந்த 10 நாட்களுக்கு முன் இந்த நாடுகளில் இருந்து பிரிட்டன் வந்தவர்கள் பிசிஆர் பரிசோதனை செய்து நெகட்டிவ் என்பதை உறுதி செய்யவேண்டும்”.

இவ்வாறு ஜாவித் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x