

5 முதல் 11 வயதுடைய குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியைத் தொடங்கியுள்ளது இஸ்ரேல்.
கரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்துவதில் இஸ்ரேல் உலகுக்கே முன்னோடி என்று கூறும் அளவுக்கு மிக வேகமாக தடுப்பூசி செலுத்தியதை. இதனால், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் மாஸ்க் அணியத் தேவையில்லை என்றும் அறிவித்தது. ஆனால், இஸ்ரேலில் கடந்த கோடை காலத்தில் கரோனா மூன்றாம் அலை வேகமெடுத்தது. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் கூட நோய் தாக்கியது.
மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியமோ, உயிரிழப்போ ஏற்படாவிட்டாலும் கூட மூன்றாவது அலை பரவலின் வேகம் அந்நாட்டை கவலையடையச் செய்தது. இதனால், பூஸ்டர் தடுப்பூசி ஊக்குவிக்கப்பட்டது. முதற்கட்டமாக இணை நோய் கொண்டோர், 60 வயதுக்கும் மேற்பட்டோருக்கு மூன்றாவது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்னர் இது தகுதி வாய்ந்த அனைவருக்கும் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், 5 முதல் 11 வயதுடைய குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதை தொடங்கியுள்ளது இஸ்ரேல்.
இது தொடர்பாக அந்நாட்டின் பிரதமர் நஃப்டாலி பென்னெட் தனது பேஸ்புக் பக்கத்தில், "கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இப்போது நாட்டில் அன்றாடம் பதிவாகும் தொற்றில் பாதி எண்ணிக்கை பாதிக்கப்படும் குழந்தைகள் வாயிலாகவே ஏற்படுகின்றது. அதுவும் குறிப்பாக 11 வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகளுக்கு தொற்று ஏற்படுகிறது. அதனால், குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது" என்றார்.
5 முதல் 11 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பிரச்சாரம் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் முன்னெடுக்கப்படுகிறது என்றாலும் கூட, தடுப்பூசி செலுத்தும் பணி திங்கள் இரவே தொடங்கிவிட்டது. பிரதமர் பென்னட்டின் இளைய மகனுக்கு இன்று கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இஸ்ரேல் நாட்டில் ஃபைஸர் தடுப்பூசி வழங்கப்படுகிறது. இஸ்ரேலின் மொத்த மக்கள் தொகை 9 மில்லியன். அதில் 5.7 மில்லியன் மக்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
இந்தியாவிலும், குழந்தைகளுக்கு வரும் ஜனவரி 2022 முதல் கரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இதுவரை 117.63 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.