

இராக்கில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றின் மீது தீவிரவாதிகள் புதன்கிழமை தாக்குதல் நடத்தினர். இதனிடையே, பாதுகாப்புப் படைகளின் உயர் அதிகாரிகள் பலரை நீக்கி உத்தரவிட்டார் இராக் அதிபர். நாடு சிதறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. எச்சரித்துள்ளது.
பாக்தாதின் வடக்கே உள்ள சலேஹெதீன் மாகாணத்தில் உள்ளது பைஜி சுத்திகரிப்பு ஆலை. இதன் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது ஏற்பட்ட மோதலில் பாதுகாப்புப்படையினர் சிலர் உயிரிழந்தனர். ஆலை தொழிலாளர்கள் தப்பி ஓடிவிட்டனர் என சுத்திகரிப்பு ஆலை ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
மோசுல் நகரம் உள்பட இராக்கில் உள்ள மிகப்பெரிய நகரங்கள் பலவற்றை தீவிரவாதிகள் கைப்பற்றியதால் எண்ணெய் வினியோகத்துக்கு அவசியம் இல்லாமல் ஆலை மூடப்பட்டு கிடக்கிறது என அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஏஎப்பி செய்தியாளரிடம் தெரிவித்தனர்.
புனிதத்தலங்களை பாதுகாக்க ஈரான் உதவும்
பாக்தாத் அரசை எதிர்த்து சண்டையிடும் சன்னி தீவிரவாதிகள் கை ஓங்குவதை தடுத்து நிறுத்தி நாட்டில் உள்ள ஷியா முஸ்லிம் புனிதத் தலங்களை பாதுகாக்க ஈரான் உதவிடும் என ஈரான் அதிபர் ஹசன் ரௌகானி, தெஹ்ரான் நகரில் புதன்கிழமை தெரிவித்தார்.
தீவிரவாதிகளை ஒடுக்கவும் புனிதத்தலங்களை பாதுகாக்கவும் இராக்கில் சண்டையிட தயாராக இருப்பதாக ஈரானியர்கள் பலர் கையெழுத்திட்டு கொடுத்துள்ளனர் என ரௌகானி குறிப்பிட்டார்.
ஐஎஸ்ஐஎல் என்ற அமைப்பின் கீழ் சண்டையிடும் தீவிரவாதிகள் மோசுல் மற்றும் திக்ரித் நகரங்களை கைப்பற்றியுள்ளனர். மேலும் பாக்தாதுக்கு வடக்கே தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர். ஈரானில் 90 சதவீதம் பேர் ஷியா பிரிவினர். மதத்தில் நாட்டம் இல்லாதவர்கள் ஷியா பிரிவினர் என நிந்திக்கிறது ஐஎஸ்ஐஎல் அமைப்பு.
தூதரக பாதுகாப்புக்கு அமெரிக்கா ஏற்பாடு
பாக்தாதில் உள்ள தனது தூதரகத்துக்கான பாதுகாப்பு பணிக்கு 275 ராணுவ வீரர்களை அமர்த்தியுள்ளது அமெரிக்கா. தூதரக பாதுகாப்பை சொந்த ஏற்பாட்டில் அமெரிக்கா பலப்படுத்திக் கொள்வது இதுவே முதன்முறை. ஐஎஸ்ஐஎல் அமைப்பின் தலைமையில் செயல்படும் தீவிரவாதிகள் மீது வான்வழியாக தாக்குதல் நடத்துவது பற்றி அமெரிக்கா பரிசீலித்து வருகிறது. தீவிரவாதிகளின் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில் நினவே மாகாணத்தின் தளபதி உள்ளிட்ட மூத்த அதிகாரிகளை பணியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார் பிரதமர் நூரி அல் மாலிகி.
நினவே மாகாணத்தின் தலைநகர் மோசுலை தீவிரவாதிகள் கைப்பற்றியதும் ஒட்டுமொத்தமாக படைவீரர்களும் போலீஸாரும் தப்பி ஓடியதையடுத்து உயர் அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார் மாலிகி.