Published : 16 Nov 2021 03:07 AM
Last Updated : 16 Nov 2021 03:07 AM

அணுமின் நிலையம் மூடப்படுவது தள்ளி போகுமா?

ஐ.நா. சார்பில் ஒன்றிணைந்த நாடுகளின் 26-வது பருவநிலை மாறுதல்மாநாடு (COP26) ஸ்காட்லாந்தில் நடைபெற்று வருகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இதில் கலந்து கொள்ளாததற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தன் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார்.

உலக வெப்பமயமாதல் குறித்து குறிப்பிடத்தக்க நடவடிக்கை எடுப்பதாக இதற்கு முன்பு அமெரிக்க அரசு உறுதிஅளித்ததில்லை. இதுகுறித்த முக்கியமானபாரிஸ் ஒப்பந்தத்தை ஐரோப்பிய யூனியனின் அனைத்து நாடுகள் உள்ளிட்ட மிகப் பல நாடுகள் ஏற்றாலும், ட்ரம்ப் தலைமையிலான முந்தைய அமெரிக்க அரசு அதற்கான தனது ஆதரவைவிலக்கிக் கொண்டுவிட்டது (உலகில் மிக அதிகமாக நச்சு வாயுக்களை வெளிப்படுத்தும் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று). ஆனால் தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாரிஸ் ஒப்பந்தம் குறித்து அக்கறை தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் அமெரிக்காவிலுள்ள ஓர்அணுமின் நிலைய செயல்பாடு குறித்து செய்யப்பட்டுள்ள மறுஆய்வு கவனத்துக்குரியதாகிறது.

அமெரிக்க மாநிலமான கலிபோர்னியா, 2050-ல் பூஜ்ஜிய அளவில்தான் தங்கள்மாநிலத்தின் நச்சுக் காற்று (கார்பன் வெளியேற்றம்) இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கோளாக வைத்திருக்கிறது. அங்கு உள்ளது டயப்லோ கான்யான் (Diablo Canyon) அணுமின் நிலையம். 1985-ல் தொடங்கப்பட்ட அந்தஅணுமின் நிலையம் இதுவரை எந்த சிக்கலும் ஏற்படாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 2013-ல் சான் ஓனோஃபெர் அணு உற்பத்தி நிலையம் நிரந்தரமாக மூடப்பட்ட பிறகு கலிபோர்னியாவில் இயங்கும் அணுசக்தி நிலையம் இது ஒன்றுதான். 1981-ல் டயப்லோ கான்யான் (Diablo Canyon) அணுமின் நிலையம் கட்டப்படும்போதே அதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்தது. இரண்டாயிரத்துக்கும் அதிகமான எதிர்ப்பாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

பொதுவாகவே அணு மின் நிலையத்தை உருவாக்க எக்கச்சக்கமான பணம்தேவைப்படும். கதிரியக்க கழிவுகளை பாதுகாப்பாக, நிரந்தரமாக அகற்றுவதும் ஒரு சவால்தான். தவிர டயப்லோ கான்யான் அணுமின் நிலையம் உள்ள பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டால் மிகவும் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படலாம் என்பதும் அந்தப் பகுதி மக்களின் அச்சமாக உள்ளது.

பல கோணங்களிலும் யோசித்த கலிபோர்னியா அரசு, 2025-ல் மேற்படிஅணுமின் நிலையம் மூடப்பட்டுவிடும் என்று அறிவித்தது. இது மிகவும் தவறானமுடிவு என்று சமீபத்தில் தெரிவித்திருக்கிறது ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம்மற்றும் மாஸச்சூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக் குழு.

கடந்த பல வருடங்களாகவே அங்குள்ள பல நீர்த்தேக்கங்களில் நீர்வரத்துகுறைந்து விட்டது. இதன் காரணமாக நீர் மின் சக்தியின் அளவும் குறைந்துவிட்டது. 2020 ஆகஸ்டில் உருவான வெப்ப அலை காரணமாக அமெரிக்காவில் மின் பயன்பாடு மிகவும் அதிகமாகி விட்டது (ஏர் கண்டிஷனர்கள் முழு அளவில் இயங்க வேண்டிய நிலை). இதன் காரணமாக மேற்படி அணுமின் நிலையம் மூடப்படுவதை தள்ளிப்போட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. குறைந்தது 2035 வரையிலாவது இது இயங்க வேண்டும் என்கிறார்கள்.

காற்று, சூரியன் மற்றும் நீரிலிருந்து மின்சாரம் எடுப்பது என்பது வெப்ப நிலைமாறுபாடுக்கு தகுந்தாற்போல் மாறக்கூடியது. இந்தக் கோணத்தில் அணுமின் நிலையத்திலிருந்து பெறப்படும் மின்சாரம்தான் நிலையானது, நம்பத் தகுந்தது. தவிர அணுசக்தியின் மூலம் கிடைக்கும் மின்சாரம் என்பதுசுற்றுச்சூழலை பாதிக்காது என்பதையெல்லாம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்கள் மேற்படி ஆராய்ச்சியாளர்கள்.

இப்போதைக்கு அமெரிக்காவின் மின்சாரத் தேவையில் ஐந்தில் ஒருபங்கு அணுமின் நிலையங்களால்தான் தீர்த்து வைக்கப்படுகிறது. மேற்படி அணுமின் நிலையம் 30 லட்சம் பேரின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்கிறது. மற்ற மின் உற்பத்தியாளர்களைவிட குறைந்த தொகைக்கும் மின்சாரத்தை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x