

இரண்டு டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்தியர்கள் சிங்கப்பூர் வரும் பட்சத்தில் கட்டாய தனிமைப்படுத்துதல் (குவாரன்டைன்) கிடையாது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
சிங்கப்பூர் விமான நிலையம் ஆசியாவிலேயே தொழில், வர்த்தகப் பயணங்களுக்குப் பெயர் பெற்ற விமான நிலையம்.
ஆனால், கரோனா தொற்றுக்குப் பின்னர் சிங்கப்பூர் அரசு தங்கள் நாட்டுக்கு வரும் விமானப் பயணிகளுக்கு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. தற்போது படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, இரண்டு டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்தியர்கள் சிங்கப்பூர் வரும் பட்சத்தில் கட்டாய தனிமைப்படுத்துதல் கிடையாது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
வரும் நவம்பர் 29 ஆம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது. அதேபோல், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக ஆகிய நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வருவோரும் டிசம்பர் 6 ஆம் தேதி முதல் கட்டாய தனிமைப்படுத்துதல் இல்லாமல் அனுமதிக்கப்படுவர்.
இதற்காக, இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியோருக்கான பயணப்பாதை அமைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், சிங்கப்பூர் வரும் பயணிகள் பயணத்துக்கு 2 தினங்களுக்கு முன்னதாக எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனை சான்றிதழை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.