Published : 15 Mar 2016 11:06 AM
Last Updated : 15 Mar 2016 11:06 AM

உலக மசாலா: 2 மூக்குகள் கொண்ட நாய்!

கலிபோர்னியாவைச் சேர்ந்த டோட் ரேயிடம் 2 மூக்குகள் உள்ள டோபி என்ற நாய் இருக்கிறது! லாஸ் ஏஞ்சல்ஸில் தெருவில் ஆதரவு இன்றி சுற்றிக் கொண்டிருந்த, இந்த நாயைத் தத்தெடுத்துக்கொண்டார் டோட் ரே. ’’இயல்பாக இல்லாத உயிரினங்களைச் சேகரிப்பதும், அவற்றை வைத்து நிகழ்ச்சி நடத்துவதும்தான் என்னுடைய வேலை. என்னிடம் இரண்டு தலைகள், 8 விரல்கள் போன்று வித்தியாசமான உயிரினங்கள் இருக்கின்றன. இப்போது இரண்டு மூக்குகள் உடைய நாயைத் தத்தெடுத்திருக்கிறேன்.

எந்த 2 மூக்குகளால் இந்த நாய் ஆதரவற்று தெருவில் அலைந்ததோ, அதே மூக்குகளால் இன்று உலகப் புகழ் பெற்றுவிட்டது. டோபியின் புகைப்படங்களுக்கு உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இரண்டு தலை உயிரினங்கள் சேகரிப்பில் நான் கின்னஸ் சாதனை நிகழ்த்திவிட்டேன். உருவத்தைக் கண்டு குறைவாக மதிப்பிடக்கூடாது என்பதைத்தான் என் நிகழ்ச்சிகள் மூலம் உலகத்துக்குச் சொல்லி வருகிறேன்’’ என்கிறார் டோட் ரே.

ரெண்டு மூக்கு டோபி வெரி க்யூட்!

பிரான்ஸைச் சேர்ந்த ஸ்டெபானி ரிச்சர்ட் பூச்சிகளைச் சேர்த்துப் புதுமையான பாஸ்தாவை உருவாக்கியிருக்கிறார். இன்று பூச்சிகளில் அதிக புரோட்டீன் இருப்பதாகக் கருதுவதால், தன்னுடைய பூச்சி பாஸ்தாவுக்கு அளவுக்கு அதிகமான ஆதரவு இருக்கும் என்று நம்பினார். ஆனால் ஆர்டர்கள் கிடைப்பது மிகக் கடினமாக இருக்கிறது. ’’எதிர்காலத்தில் பூச்சிகளில் இருந்துதான் அதிக அளவு புரோட்டீன்கள் மனிதர்களுக்குக் கிடைக்க இருக்கிறது. நான் அதைக் கொஞ்சம் முன்னால் ஆரம்பித்துவிட்டேன். 2012ம் ஆண்டு பூச்சி பாஸ்தாவை நான் உருவாக்கியபோது, விளையாட்டு வீரர்களுக்கு இது வரப்பிரசாதம் என்று கொண்டாடப்பட்டது.

ஆனால் படிப்படியாகப் பூச்சி பாஸ்தாவுக்கு ஆதரவு குறைந்து வருகிறது. 7 சதவிகிதம் வெட்டுக்கிளிகள், 93 சதவிகிதம் கோதுமை மாவு இவற்றுடன் முட்டைகளைச் சேர்த்து பாஸ்தாவை உருவாக்குகிறேன். இளம் பழுப்பு நிறத்தில் பாஸ்தாவைப் பார்க்கவே அழகாக இருக்கும். சைவம், அசைவம் சாப்பிடுபவர்களுக்கு மிகப் பெரிய மாற்று உணவாக இது இருக்கும். விரைவில் என் நிறுவனத்தை விரிவாக்கப் போகிறேன். பூச்சி பாஸ்தா பற்றிய விழிப்புணர்வு கொண்டு வர இருக்கிறேன்’’ என்கிறார் ஸ்டெபானி ரிச்சர்ட்.

பழகும் வரைதான் இந்தத் தயக்கம்…

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஆஸ்டின் ஷீல்ட் என்ற நிறுவனம் குண்டுகள் துளைக்காத சோஃபாக்களையும் நாற்காலிகளையும் உருவாக்கியிருக்கிறது. ’’திடீரென்று நிகழும் துப்பாக்கிச் சூடுகளின்போது ஒளிந்துகொள்வதற்கு இடம் இருக்காது. அநியாயமாக ஏராளமான உயிர்களை இழந்து இருக்கிறோம். எதிர்பாராத தாக்குதல்கள் நிகழும்போது, சட்டென்று சோஃபா, நாற்காலிகளின் பின் ஒளிந்துகொண்டு தப்பிவிடலாம். அதற்கு ஏற்றவாறு இவற்றைத் தயாரித்து இருக்கிறோம்.

மக்கள் அதிகம் வந்து செல்லும் விடுதிகள், தூதரகங்கள், அருங்காட்சியகங்கள் போன்ற இடங்களில் இந்த சோஃபாக்களையும் நாற்காலிகளையும் வைக்கலாம். ஒரு சில உயிர்களைக் காப்பாற்ற முடிந்தாலும் அது நல்ல விஷயம்தானே! சாதாரண சோஃபா, நாற்காலிகளை விட விலை மிக அதிகம். அதாவது ஒரு சோஃபா 4.6 லட்சம் ரூபாய்! பாதுகாப்பு என்பதைக் கருத்தில் கொண்டால், இது பெரிய செலவாக இருக்காது’’ என்கிறார் ஆஸ்டின் ஷீல்ட் உரிமையாளர்.

மொத்த கட்டிடத்துக்கும் பாதுகாப்பு கொடுப்பது, இதை விட மலிவாக இருக்கும் போலிருக்கே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x