

ஆப்கானிஸ்தானில் 95 சதவீத மக்களுக்கு போதுமான உணவு இல்லை, மிகத் தீவிரமான மனிதநேயப் பிரச்சினைகளை ஆப்கன் சந்தித்து வருகிறது என ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறியபின் தலிபான்கள் பிடிக்குள் அந்நாடு வந்தது. தலிபான்கள் இடைக்கால முஸ்லிம் எமிரேட் ஆட்சியை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
கடந்த முறை ஆட்சியைப் போல் மோசமாக இருக்காது, பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படும், பொருளாதாரம் சீரமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
ஆனால், தலிபான்கள் ஆட்சிக்கு வந்தபின் ஆப்கானிஸ்தான் பொருளாதாரம் நாளுக்கு நாள் பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது. அத்தியாவசியப் பொருட்கள் கடும் விலை ஏற்றம், வேலைவாய்ப்பின்மை, வறுமை, பட்டினி போன்றவை ஆப்கானிஸ்தானில் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஐ.நா. மற்றும் உலக சுகாதார அமைப்பு மட்டும் மனிதநேய அடிப்படையில் உதவிகளை வழங்கி வருகின்றன.
இந்நிலையில் ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்தின் தலைவர் டேவிட் பீஸ்லி பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “ இந்த பூமியில் மிகவும் மோசமான மனிதநேயப் பிரச்சினைகளை ஆப்கானிஸ்தான் சந்தித்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் வாழும் மக்களில் 95 சதவீதம் பேருக்கு போதுமான உணவு இல்லை. 2.30 கோடி மக்கள் பட்டினியின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.
நினைத்துப் பாருங்கள், உணவில்லாமல் உங்கள் பேரன் பேத்திகள், குழந்தைகள் மரணத்தை எதிர்கொண்டால் உங்களால் முடிந்தததை அனைத்தையும் செய்வீர்கள்தானே. உலகளவில் நம்மிடம் 400 லட்சம் கோடி டாலர் சொத்து இருந்தும் என்ன பயன். நமக்கு வெட்கமாக இருக்கிறது.
ஆப்கானிஸ்தான் சமீபத்தில் நடந்த அரசியல் மாற்றங்களால் அங்குமக்கள் மிக மோசமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உலக நாடுகள் மனிதநேய உதவிகளை தொடர்ந்து வழங்கிட வேண்டும்” எனத் தெரிவித்தார்
யுனிசெப் அறிக்கையின்படி, ஆப்கானிஸ்தானில் 1.40 கோடி குழந்தைகளுக்கு உணவுப்பற்றாக்குறை நிலவுகிறது, 50 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.
20 ஆண்டு ஆட்சியை தலிபான்கள் குலைத்ததால், அங்கு பொருளாதாரம் சீரழிந்தது, வெளிநாடு உதவி வரவில்லை, பொருளாதாரம் பலவீனமடைந்தது. தலிபான்கள் அரசை அங்கீகரிக்க உலக நாடுகள் மறுப்பதால் மனித நேய அடிப்படையிலான உதவிகள் கிடைப்பதிலும் சிக்கல் நிலவுகிறது.
அடுத்துவரக்கூடிய குளிர்காலத்தில் உலக நாடுகள் தலையிட்டு உதவாவிட்டால் ஆப்கன் மக்கள் இப்போது சந்திக்கும் பட்டினி, உணவுப் பற்றாக்குறையைவிட இன்னும் மோசமான சிக்கல்களை சந்திப்பார்கள், பேரழிவுக்கு செல்லும் என ஐ.நா. வேதனை தெரிவித்துள்ளது.