

பெண் கல்விக்காக போராடி வரும் நோபல் பரிசு வென்ற மலாலா யூசுப்சாய், திடீர் திருமணம் செய்து கொண்டார். அவர் தனது திருமணப் புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்து, "இன்று எனது வாழ்வின் பொன்னான நாள். ஆஸரும் நானும் வாழ்க்கைத் துணையாக இணையும் வகையில் இன்று திருமணம் செய்து கொண்டோம். பிரிமிங்ஹாமில் எங்கள் குடும்பத்தினர் சூழ எளிய முறையில் திருமணம் நடந்தது. உங்களின் ஆசியும் பிரார்த்தனையும் வேண்டும். வாழ்க்கைப் பயணத்தில் ஒன்றாக இணைந்து நடக்கப் போவதில் எங்களுக்கு மகிழ்ச்சி" என்று பதிவிட்டுள்ளார்.
யார் இந்த மலாலா?
பாகிஸ்தானைத் சேர்ந்த மலாலா யூசுப்சாய், பெண்களின் கல்விக்காகத் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். 15 வயதுச் சிறுமியாக இருந்த அவரை 2012-ம் ஆண்டு தலிபான் தீவிரவாதிகள் சுட்டனர். கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில், உயர் தப்பினார் மலாலா.
உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட போதிலும் தொடர்ந்து பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காகக் குரல் கொடுத்து வருகிறார். இதைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அவருக்குக் கிடைத்தது. உலகிலேயே மிகவும் இளம் வயதில் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமைக்கு மலாலா சொந்தக்காரர் ஆனார்.
திருமணம் குறித்து கேள்வி எழுப்பி விமர்சனத்துக்கு உள்ளானவர்?
ஒரு முறை வோக் பத்திரிகைக்குப் பேட்டியளித்த மலாலா, திருமணம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போது, "மக்கள் ஏன் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று எனக்கு இதுவரை புரியவில்லை. இரு நபர்கள் இணைந்து வாழ்வதற்குத் திருமணம் அவசியமா? உங்கள் வாழ்க்கையில் நீங்கள் விரும்பும் நபருடன் வாழ விரும்புகிறீர்கள் அல்லவா? அப்படி இருக்க ஏன் ஒரு ஆவணத்தில் கையெழுத்திட்டுத் திருமணம் செய்து கொள்கிறீர்கள். அவ்வாறு இல்லாது நீங்கள் ஏன் துணையாளராக வாழ்க்கையைத் தொடரக் கூடாது" என்று பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து மலாலா திருமணத்துக்கு எதிராகப் பேசிவிட்டார் என்று பாகிஸ்தான் ஊடகங்களில் நெட்டிசன்கள் பலரும் அவரை விமர்சிக்கத் தொடங்கினர்.
இந்நிலையில் அவர் நேற்று எளிமையாக இஸ்லாமிய நடைமுறைப்படி திருமணம் செய்து கொண்டார்.