Published : 06 Nov 2021 03:05 AM
Last Updated : 06 Nov 2021 03:05 AM

சீனா அனுப்பிய உரத்தை நிராகரித்தது இலங்கை

சீனாவிலிருந்து அனுப்பப்பட்ட உரத்தின் மாதிரிகள் மண்ணின் உயிர்சத்துக்கு பாதிப்பாக அமையும் என்றுகூறி இலங்கை அரசு நிராகரித்துவிட்டது. மேலும் தாங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு தரத்துடன் அது இல்லை என்றும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இலங்கை அரசின் பயிர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மண்ணின் உயிர்ச்சத்துக்கு கேடு விளைவிக்கும் எத்தகைய உரத்தையும் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து அனுப்பப்பட்ட உர மாதிரிகள் உயிர்ச்சத்துக்கு கேடு விளைவிப்பதாக உள்ளதாக பரிசோதனை மாதிரிகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் சீன அதிகாரிகள் அந்த உர மாதிரிகளை மறு பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் இலங்கை அரசின் பரிசோதனை முறைகள் சர்வதேச தரத்தில் இல்லை என்றும் கூறியுள்ளனர்.

இருப்பினும் உர மாதிரியை மறு பரிசோதனை செய்யும் கோரிக்கையை இலங்கை வேளாண் துறை இயக்குநர் ஜெனரல் டாக்டர்அஜந்தா டி சில்வா நிராகரித்துவிட்டார். உலகம் முழுவதும் உர பரிசோதனைக்கு ஒரே மாதிரியான அளவீடுகள் பயன்படுத்தப்படுகின்றன என்றும் இலங்கை அரசு மேற்கொண்ட பரிசோதனை அனைத்தும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

இலங்கையில் உள்ள சீன தூதரகம் இலங்கை அரசின் மக்கள் வங்கியை கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது. உர இறக்குமதிக்கான தொகையை செலுத்தத் தவறியதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட இரண்டு நாட்களில் இலங்கை அரசு அதற்கு பதிலடியாக சீனாவின் உர மாதிரி தரமற்றது என்று கூறி நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சீனாவின் குயிங்டாவ் சீவின் பயோடெக் குழும நிறுவனம் அனுப்பிய உர மாதிரிகள் தரமற்றவை என்பதால் உரத்துக்கான இறக்குமதி தொகையை இலங்கை மக்கள் வங்கி நிறுத்தி வைத்தது.

இலங்கை அரசின் வர்த்தக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இறக்குமதி தொகையை நிறுத்தி வைத்ததாக இலங்கை மக்கள் வங்கி தெரிவித்தது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்த அடுத்தகட்ட அனுமதி வழங்கப்படும் என வங்கி தெரிவித்துள்ளது என்றும் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை விவசாயிகள் பயிர் சாகுபடிக்கு பெருமளவில் உரத்தையே நம்பியுள்ளனர். இப்போது இலங்கையில் விதைப்பு சீசன் தொடங்கியுள்ளது. உயிரி உரம் கிடைக்காத சூழலில் சில விவசாயிகள் இன்னமும் பணிகளைத் தொடங்கவில்லை. இலங்கையில் ஏற்பட்டுள்ள உரத் தட்டுப்பாட்டை சமாளிக்க, இந்தியாவிலிருந்து ரசாயன உரம் உள்ளிட்டவற்றை இலங்கை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அரசு சீனாவின் உரத்தின் தரம் குறித்து பிரச்சினை எழுப்பியுள்ள நிலையில், சீனாவிலிருந்து உரம் ஏற்றப்பட்ட கப்பல் மீண்டும் சீனாவுக்கே திரும்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் வழியில் சிங்கப்பூருக்கு சென்று அங்கிருந்து மீண்டும் இலங்கைக்கு செல்லலாம் என்றும் சீனாவுக்குத் திரும்பாது என்றும் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x