

தங்களின் கரோனா மாத்திரை தீவிர நோய் பாதிப்பு, உயிர்ச்சேதத்தில் இருந்து பாதுகாப்பதில் 89% திறன் வாய்ந்தது என ஃபைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக நேற்று, உலகின் முதல் கரோனா மாத்திரைக்கு பிரிட்டன் அரசு அனுமதியளித்துள்ளது. இந்த மாத்திரைக்கு மால்னுபிராவிர் (molnupiravir) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த மாத்திரை பிரிட்டனில் லேஜ்விரோ (Lagevrio ) என்ற பிராண்ட் பெயரில் விற்பனை செய்யப்படவுள்ளது. இதற்கு பிரிட்டனின், மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்களுக்கான ஒழுங்குமுறை ஆணையம் (The Medicines and Healthcare products Regulatory Agency MHRA) அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
இந்நிலையில் ஃபைஸர் நிறுவனம் தங்களின் கரோனா மாத்திரை தீவிர நோய் பாதிப்பு, உயிர்ச்சேதத்தில் இருந்து பாதுகாப்பதில் 89% திறன் வாய்ந்தது எனத் தெரிவித்துள்ளது.
மேலும், தங்களின் இடைக்கால அறிக்கையை அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் விரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதனால் ஃபைஸர் நிறுவனப் பங்குகளில் விலை அமெரிக்கச் சந்தையில் 13% அதிகரித்தது. அதேவேளையில் மெர்க் அண்ட் கோ நிறுவனத்தின் பங்குகளின் விலை 6% சரிந்தது. ஃபைஸரின் மாத்திரைக்கு பேக்ஸ்லோவிட் ( Paxlovid) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதனை மூன்று மாத்திரைகள் வீதம் தினமும் இரண்டு வேளை வழங்க வேண்டும்.
கரோனா அறிகுறி ஏற்பட்ட 5 நாட்களுக்கு இந்த மாத்திரைகளை நோயாளிகளுக்கு வழங்குவதன் மூலம் தீவிர பாதிப்பு, உயிர்ச்சேதத்தை 89% தவிர்க்க முடியுமாம்.
சந்தைக்கு வரும் மாத்திரைகள்; தடுப்பூசிக்கு மாற்றாகுமா?
உலகளவில் இன்றைய தேதிவரை 24.8 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 50.2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் உலக நாடுகள் பலவும் தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்தி வருகின்றன. ஐ.நா.வும் தடுப்பூசி செலுத்துவதில் ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது என வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், பிரிட்டன் நாட்டில் கரோனாவுக்கு எதிரான ஆன்ட்டி வைரல் மாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உலகிலேயே கரோனாவுக்கு எதிரான மாத்திரைக்கு அனுமதியளித்த முதல் நாடு என்ற அந்தஸ்தைப் பிரிட்டன் பெற்றுள்ளது.
இந்நிலையில் தான், தங்களின் கரோனா மாத்திரை தீவிர நோய் பாதிப்பு, உயிர்ச்சேதத்தில் இருந்து பாதுகாப்பதில் 89% திறன் வாய்ந்தது என ஃபைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இப்படியாக சந்தைக்கு ஆன்ட்டி வைரல் மாத்திரைகள், கரோனா தடுப்பூசிக்கு மாற்றாக அமையுமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.