Published : 04 Nov 2021 03:11 AM
Last Updated : 04 Nov 2021 03:11 AM

கிளாஸ்கோ பருவ நிலை மாற்ற மாநாடு; பேசுவதை நிறுத்திவிட்டு செயலில் இறங்குங்கள்: உலக தலைவர்களுக்கு தமிழக சிறுமி கோரிக்கை

கிளாஸ்கோவில் நடைபெற்ற பருவ நிலை மாற்ற மாநாட்டில் பேசிய தமிழக சிறுமி வினிஷா உமாசங்கர், “சுற்றுச்சூழல் விவகாரத்தில் உலகத் தலைவர்கள் பேசுவதை நிறுத்திவிட்டு செயலில் இறங்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

உலகத் தலைவர்கள் தாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் இன்றைய தலைமுறையினர் கோபத்திலும் விரக்தியிலும் உள்ளனர் என்று அந்தச் சிறுமி பேசியது உலக அளவில் கவ னத்தை ஈர்த்துள்ளது.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற பருவநிலை மாற்ற மாநாட்டில் தூய்மை தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசுவதற்கு தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயதான சிறுமி வினிஷா உமாசங்கருக்கு இளவரசர் வில்லியம்ஸ் அழைப்பு விடுத்திருந்தார். இவர் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் சூரிய சக்தி மூலம் இயங்கும் இஸ்திரி வண்டியை வடிவமைத்தற்காக சுற்றுச் சூழலுக்கான ஆஸ்கார் எனப்படும் ‘எர்த்ஷாட்’ விருதுக்குத் தேர்வானவர் ஆவார்.

இந்தியப் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடன் உட்பட 100-க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் கலந்துகொண்ட மாநாட்டில் வினிஷா ஆற்றிய உரையில் கூறியதாவது:

உலகத் தலைவர்கள் அனைவரிடமும் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன். பேசுவதை நிறுத்திவிட்டு செயலில் இறங்குங்கள். புதைபடிவ எரிபொருள்கள், புகை மற்றும் மாசுபட்ட சூழல் ஆகியவற்றில் கட்டமைக்கப்பட்ட பொருளாதாரத் துக்குப் பதிலாக சுற்றுச் சூழலுக்கு உகந்த கண்டுபிடிப்புகள், திட்டங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் பழைய விவாதங்களையே தொடராமல் எதிர்காலத்துக்கான புதிய சிந்தனையை முன்னெடுக்க வேண்டும்.

எர்த்ஷாட் விருது பெற்றவர்கள் மற்றும் தேர்வானவர்களின் கண்டுபிடிப்புகள், முயற்சிகளுக்கு உதவ வேண்டும். உங்களுடைய நேரம், பணம் மற்றும் முயற்சி ஆகியவற்றை வளமான எதிர்காலத்தை உருவாக்க எங்களிடம் முதலீடு செய்ய வேண்டும்.

அதேசமயம் தெளிவாக சொல்கிறேன். நீங்கள் செயல்பட தாமதமானாலும், எங்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்றாலும் நாங்கள் நிறுத்த மாட்டோம், தொடர்ந்து பயணிப்போம். நீங்கள் கடந்த காலத்திலேயே முடங்கியிருந்தால் நாங்கள் எதிர்காலத்தை உருவாக்குவதை நோக்கி நகர்ந்துகொண்டே இருப்போம்.

ஆனால் தயவுசெய்து என்னுடைய கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். நான் உங் களுக்கு உறுதியளிக்கிறேன், அதற்காக ஒருபோதும் நீங்கள் வருந்தும்படி ஆகாது.

உலகத் தலைவர்கள் தாங்கள் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் இன்றைய தலைமுறையினர் பெரும் கோபத்திலும், விரக்தியிலும் உள்ளனர். எங்களுடைய கோபத்தை வெளிப்படுத்த காரணங்களும் உரிமையும் உள்ளது. ஆனால் எங்களுக்கு இப்போது கோபம் கொள்ள நேரமில்லை. அதைவிட முக்கியமானது செயலாற்றுவதுதான்.

நான் இந்தியாவை சேர்ந்த பெண் மட்டுமல்ல. இந்த பூமியைச் சேர்ந்த பெண்ணும் கூட என்றே கருதுகிறேன். அதற்காக நான் பெருமைப்படுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x