

நேபாளத்தில் குகுர் திகார் பண்டிகையின் இரண்டாவது நாளான இன்று அந்நாட்டு மக்கள் நாய்களை வழிபடும் வித்தியாசமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
நேபாளம் முழுவதிலும் உள்ள இந்துக்கள் ஐந்து நாள் திகார் திருவிழாவைக் கொண்டாடி வருகிறார்கள். நேபாளத்தின் 30 மில்லியன் மக்கள் தொகையில் 80% இந்துக்கள் ஆவர். அங்குள்ள இந்துக்களின் சிறப்பு வாய்ந்த பண்டிகையாக குகுர் திகார் அமைந்துள்ளது.
குகுர் திகார் பண்டிகைகளின் இரண்டாவது நாளான இன்று (புதன்கிழமை), தங்கள் நாய்களை குளிப்பாட்டி, மாலைகள் அணிவித்து சிறப்பு உபசரிப்புகளை வழங்கினர், இச்சமயத்தில் காகங்கள் மற்றும் பசுக்களுக்குக் கூட மரியாதை செலுத்தப்பட்டன.
மரணத்தின் கடவுளான எமதர்ம ராஜா தனது தூதராக நாய்களையே வைத்திருப்பதாக நேபாள மக்கள் கருதுகின்றனர்., மேலும் விலங்குகளை வணங்குவது அவருக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடியது என்பது அவர்களது ஆன்மிக நம்பிக்கை.
தலைநகர் காத்மாண்டு நகரில் வசிக்கும் இல்லத்தரசி பார்வதி தேவகோடா என்பவர் இனிப்புகள், பூக்கள் மற்றும் குங்குமத்தை ஒரு தட்டில் ஏந்தியபடி வழிபாட்டில் ஈடுபட்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "எங்கள் ஊரில் நடக்கும் வெவ்வேறு பண்டிகைகளில் குகுர் திகார் சிறப்பு வாய்ந்தது, குகுர் என்றால் நேபாளத்தில் நாய் என்று பொருள். ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் நான் என் நாயை வணங்குகிறேன்," என்றார்.
அங்கிருந்த பல குடும்பத்தினரும் தங்கள் செல்லப்பிராணிகளை குளிப்பாட்டி, கழுத்தில் சாமந்தி மலர் மாலைகள் கட்டி, அவற்றின் நெற்றியில் நல்லெண்ணெய் பூசி அலங்கரித்தனர். இனிப்புகள், இறைச்சி, பால் மற்றும் அரிசி போன்ற சிறப்பு உணவுகளை வழங்கினர். தெருநாய்களுக்கு கூட உணவு மற்றும் மாலைகள் பிரசாதமாக கிடைத்தது.
காவல் நாய்கள் பயிற்சி மையத்தில் நடைபெற்ற விழா
காத்மாண்டுவில், காவல் நாய்கள் பயிற்சி மையத்தில் இப்பண்டிகையை யொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் 47 நாய்கள் பங்கேற்றன.
பயிற்சி மையத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகள் பற்றி போலீஸ் அதிகாரி ராம் சந்திர சத்யால் கூறியதாவது:
விழாவில் நாய்களுக்காக பல போட்டிகள் நடத்தப்பட்டன. கீழ்ப்படிதலை வெளிப்படுத்துதல், தடைகளை கடந்து செல்லுதல், உயரம் தாண்டுதல் மற்றும் ஓட்டங்கள் போன்றவை அதில் அடங்கும். நாய்கள் போதைப் பொருட்கள், குற்றவாளிகள், மறைக்கப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் பேரழிவுகளின் போது மீட்பு நடவடிக்கைகளில் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் பயிற்சி பெற்ற நாய்களைக் கொண்டு இவ்விழாவில் நாங்கள் நிரூபித்துக் காட்டினோம்''
இவ்வாறு ராம் சந்திர சத்யால் தெரிவித்தார்.