

நைஜீரியாவில் 60க்கும் மேற்பட்ட சிறுமிகள் மற்றும் 31 சிறுவர்களை போகோ ஹாரம் தீவிரவாதிகள் கடத்தி சென்றுள்ளனர்.
கடந்த ஏபரல் 15-ம் தேதி, நைஜீரியாவில் பள்ளி ஒன்றினுள் புகுந்த போகோ ஹாரம் தீவிரவாதிகள், துப்பாக்கி முனையில் 200-க்கும் மேற்பட்ட சிறுமிகளை கடத்திச் சென்றனர். கடத்தப்பட்ட சிறுமிகள் இதுவரை மீட்கப்படாத நிலையில், நைஜீரிய ராணுவம் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இந்த விஷயத்தில் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளின் ராணுவ உதவியை நைஜீரிய அரசு கோரியபோதிலும் இதுவரையில் இந்த சிறுமிகள் குறித்த விவரங்கள் அறியப்படவில்லை. இது தவிர போகோ ஹாரம் நடத்தும் தினசரி தாக்குதல்களும் நைஜீரிய அரசுக்கு மிக பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் போர்னோ மாநிலம், மைடிகுரி நகரில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கும்மாப்சா கிராமத்துக்குள் நுழைந்த தீவிரவாதிகள் 60க்கும் மேற்பட்ட சிறுமிகள், 31 சிறுவர்கள் மற்றும் சில இளம்பெண்களையும் கடத்திச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், சிறுவர்களை கடத்த வந்தவர்களை எதிர்த்து போராடிய 4 கிராம வாசிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே அரசுப் படைகளால் கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தங்கள் இயக்கத்தவர்களை விடுதலை செய்தால் மாணவிகளை விடுவிக்க தயார் என்று போகோ ஹாரம் தீவிரவாதிகள் நிபந்தனை விதித்துள்ளனர்.