

ஏமன் போர் குறித்து சவுதிக்கு எதிராக லெபனான் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கருத்து தெரிவித்தார். இதனால் 48 மணி நேரத்துக்குள்ளாகத் தங்கள் நாட்டிலிருந்து லெபனான் தூதர் வெளியேற வேண்டும் என்று சவுதி தெரிவித்துள்ளது.
லெபனான் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் கோர்தாஹி உள்நாட்டுச் செய்தி நிறுவனத்துக்கு நேர்காணல் ஒன்றில் பேசும்போது, ஏமனில் சவுதி செய்யும் போர் அர்த்தமற்றது. அந்தப் போரை சவுதி நிறுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு சவுதி சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனால் லெபனான் - சவுதி உறவிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் லெபனான் தூதர் நாட்டை வெளியேற வேண்டும் என்று சவுதி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சவுதி வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், “ஏமன் அமைச்சர்கள் இவ்வாறு பேசுவது புதிதல்ல. லெபனான் அதிகாரிகள் உண்மைகளைப் புறக்கணித்ததாலும், சரியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதாலும் சவுதி வருத்தம் கொண்டுள்ளது. லெபனானிலிருந்து வரும் இறக்குமதிப் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குடிமக்கள் யாரும் லெபனானுக்குப் பயணிக்க வேண்டாம். சவுதிக்கான லெபனான் தூதர் 48 மணி நேரத்தில் நாட்டிலிருந்து வெளியேற வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏமன் போர்
தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.
மேலும், ஐக்கிய அமீரக ஆதரவு ஏமன் தென்பகுதி பிரிவினைவாதிகள், ஏமன் அரசுக்கு எதிராகச் சண்டையிட்டு வந்தனர். ஏமனில் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏமன் போரில் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் பஞ்சத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.