

டெல்டா வைரஸிலிருந்து பிரிந்து புதிதாக உருவெடுத்துள்ள ஏஒய்.4.2 வைரஸ் 42 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், “ஏஒய்.4.2 வைரஸ் தொற்றின் வீரியம் குறித்து அறிய தொடர் ஆய்வக முடிவுகள் நடத்தப்படுகின்றன. டெல்டா வைரஸிலிருந்து பிரிந்து புதிதாக உருவெடுத்துள்ள ஏஒய்.4.2 வைரஸ் 42 நாடுகளில் கண்டெறியப்பட்டுள்ளது. இதில் 93% தொற்று பிரிட்டனில் மட்டும் கண்டறியப்பட்டுள்ளது. டெல்டா வைரஸிலிருந்து பிரிந்து உருவான மற்ற 20 வைரஸ்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம். கடந்த வாரத்தில் 4% கரோனா தொற்று உலக அளவில் அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏழை நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என்று வளர்ந்த நாடுகளை உலக நாடுகள் கேட்டுக்கொண்டுள்ளன.
முன்னதாக, ஏஒய்.4.2 வைரஸ் பிரிட்டனில் கடந்த ஜூலை மாதம் முதன்முதலில் கண்டறியப்பட்டது. அதன்பின் படிப்படியாக பிரிட்டனில் அதிகரித்து, பல்வேறு நாடுகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக ஏஒய்.4.2 வைரஸ் குறித்து தீவிரமாக பிரிட்டன் மருத்துவ வல்லுநர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.