

சுமார் 9 மாதத் தொடர் ஊரடங்குக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் போன்ற பகுதிகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஆஸ்திரேலியாவில் இந்த வருடம் தொடக்கம் முதல் டெல்டா வைரஸ் காரணமாக கரோனா தொற்று அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து விக்டோரியா, மெல்போர்ன், நியூ சவுத் வேல்ஸ் போன்ற மாகாணங்களில் கரோனா பரவல் அதிகரித்தது.
கரோனாவைக் கட்டுப்படுத்த துரிதப் பரிசோதனைகள் முடக்கப்பட்டு கடந்த 9 மாதமாக ஊரடங்கு விதிக்கப்பட்டது. கரோனா தொற்று குறைந்துள்ளதன் காரணமாக தற்போது மெல்ல மெல்லத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மெல்போர்ன், விக்டோரியா போன்ற பகுதிகள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன. மால்கள், சந்தைகள் போன்ற பகுதிகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது” என்று செய்தி வெளியாகியுள்ளது.
கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மெல்போர்னில் சுமார் 80% மக்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இளைஞர்கள் பலரும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருப்பதால் விரைவில் அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் ஆஸ்திரேலிய அரசு வலியுறுத்தி வருகிறது.
சமூக இடைவெளியும், தடுப்பூசியுமே கரோனா பரவலைத் தடுக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கரோனா தடுப்பூசியைச் செலுத்த பல்வேறு உலக நாடுகள் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் பூஸ்டர் தடுப்பூசிகளைச் செலுத்த ஆயத்தமாகி உள்ளன.
உலகம் முழுவதும் 24 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 49 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். கரோனா பாதிப்பில் தொடர்ந்து அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.