

ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடமாக இருக்க போவதில்லை என்று தலிபான்கள் உறுதியளிக்க வேண்டும் என்று அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அமெரிக்க - இந்தியா நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக நடந்து வருகிறது.
இந்த கூட்டத்தின் முடிவில் இன்று அமெரிக்க - இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் வெளியிட்ட கூட்டறிக்கையில், “ ஆப்கானிஸ்தான், தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக பயன்படுத்தப்படாமல் இருப்பதை தலிபான்கள் உறுதிப்படுத்த வேண்டும். மேலும் ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டுள்ள தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுதிக் கொண்டுள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்திய அரசு மற்றும் மக்களுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கும் என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கனிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறியபின் அந்நாட்டைத் தங்கள் பிடிக்குள் தலிபான்கள் கொண்டுவந்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசை அகற்றிய தலிபான்கள், இடைக்கால இஸ்லாமிய எமிரேட் அரசை நிறுவப்போவதாக அறிவித்தனர்.
அதற்கான அமைச்சரவைப் பட்டியலையும் கடந்த செப்டம்பர் 8-ம் தேதி அறிவித்தனர்.
ஆப்கனின் பிரதமராக முல்லா முகமது ஹசன் அகுந்த், அவருக்குத் துணையாக முல்லா அப்துல் கனி பராதரும், மவுளவி அப்துல் சலாம் ஹனாபியும் நியமிக்கப்பட்டனர்.
90- களில் தலிபான்களின் ஆட்சி அச்சம் தரும் வகையில் இருந்ததால், அந்நாட்டு மக்கள் அண்டை நாடுகளுக்குத் தப்பிச் சென்று வருகின்றனர். ஆனால், மக்கள் யாரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று தலிபான்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் தலிபான்களின் ஆட்சியை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கீகரிக்காத சூழலே நிலவுகிறது.