

சிக்கப்பூரில் சமீப நாட்களாக வழக்கத்துக்கு மாறாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் தரப்பில், “கடந்த சில நாட்களாக வழக்கத்துக்கு மாறாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சிங்கப்பூரில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்கள் எண்ணிக்கை 300 ஆக அதிகரித்துள்ளது.
சிங்கப்பூரில் 80%க்கும் அதிகமானவர்கள் கரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். 12% பேர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று அதிகரிப்புக்கான காரணம் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்து வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை வருவதைத் தொடர்ந்து லிட்டில் இந்தியா உள்ளிட்ட சிங்கப்பூரின் முக்கிய வீதிகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கரோனா தடுப்பூசியைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளே முதன்மையானதாகப் பார்க்கப்படுகின்றன. இந்த நிலையில், அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் பூஸ்டர் தடுப்பூசிகளைச் செலுத்த ஆயத்தமாகி உள்ளன.
உலகம் முழுவதும் 24 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 22 கோடி பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 49 லட்சம் பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.