

சீனாவில் டீசலுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் ரேஷன் முறையில் குறைவான அளவு மட்டுமே வாகனங்களுக்கு டீசல் வழங்கப்படுகிறது.
சீனாவில் பெட்ரோல், டீசல் உற்பத்தி குறைந்துள்ளதாலும், விலை உயர்ந்து வருவதாலும் டீசல் விநியோகத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவருக்கும் குறைந்த அளவு மட்டுமே டீசல் விநியோகம் செய்யப்படுகிறது.
சீனாவில் தற்போது நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயுவிற்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் அங்கு கடும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டது. தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளில் மின்சாரம் இல்லாத நிலை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து தற்போது டீசலுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. லாரிகளுக்கு டீசல் 10% மட்டுமே நிரப்பப்படுகின்றன. இதனால் சில லாரி ஓட்டுநர்கள் டீசல் நிரப்ப நாள் முழுவதும் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுவதாக கூறுகின்றனர்.
டீசல் பற்றாக்குறை உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு பற்றாக்குறையால் பாதிப்புள்ள நிலையில் டீசல் பற்றாக்குறை மின்வெட்டையும் உருவாக்கியுள்ளது.
இதுகுறித்து ஹெபெய் மாகாணத்தில் உள்ள ஷிஜியாஜுவாங்கைச் சேர்ந்த லாரி உரிமையாளர் ஒருவர் கூறுகையில் ‘‘டீசல் விலை உயர்வால் ஏற்கெனவே பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறோம். இப்போது போதுமான டீசலையும் பெற முடியாத நிலை உள்ளது. எரிவாயு நிலையங்கள் டீசல் நிரப்புவதற்கு 100 யுவான் அல்லது 15.70 டாலர் கட்டணம் விதிக்கின்றன. அதுபோலவே ஒரு வாகனத்துக்கு ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே டீசல் வழங்கப்படுகிறது. டீசல் விலை செப்டம்பர் தொடக்கத்தில் இருந்து சுமார் 55 சதவீதம் உயர்ந்துள்ளது. இப்படியெல்லாம் நான் பார்த்ததில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.