

கரோனா வைரஸுக்கு எதிரான ஈரானின் போராட்டத்தை வலுப்படுத்த சுமார் 6.3 மில்லியன் டாலர் மதிப்பிலான மருத்துவப் பொருட்களை ஜப்பான் வழங்கியுள்ளது.
கரோனா பரவல் நெருக்கடியை ஈரான் சரியாகக் கையாளவில்லை என்றும், ஆகஸ்ட் மாதம் ஈரானில் ஏற்பட்ட கரோனா ஐந்தாம் அலையில் தினசரி 600 பேர் வரை பலியாகினர் என்றும் மனித உரிமை அமைப்புகள் தெரிவித்தன. இந்த நிலையில் ஈரானுக்கு ஜப்பான் மருத்துவ உதவி வழங்கியுள்ளது.
இதுகுறித்து ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், “ கரோனாவுக்கு எதிராக வலிமையாகப் போராட ஈரானுக்கு சுமார் 6.3 மில்லியன் டாலர் மருந்துகளை வழங்கியுள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் சமீப நாட்களாக கரோனா தடுப்பூசி செலுத்துவதைத் துரிதப்படுத்தி வருகிறது. இருப்பினும் நாட்டின் சில பகுதிகளில் கரோனா பரவல் தீவிரமாக இருப்பதன் காரணமாக அடுத்த மாதத்தில் ஆறாவது கரோனா அலையை எதிர்கொள்ள இருக்கிறது என்று ஈரான் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. எனினும், முடிந்த வரையில் கரோனா ஆறாவது அலையைத் தடுப்பதற்கான தீவிர முயற்சியில் ஈரான் இறங்கியுள்ளது.
மத்தியக் கிழக்கு நாடுகளில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளுள் ஈரானும் ஒன்று. ஈரானில் 50 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.