

சிரியாவில் இருந்து ரஷ்ய படைகளை வாபஸ் பெற அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார்.
சிரியாவில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நீடிக்கிறது. அந்த நாட்டு அதிபர் ஆசாத் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் போரில் ஈடுபட்டு வருகின்றன. இதுதவிர ஐ.எஸ். தீவிரவாதிகள், அல்-காய்தா தீவிரவாதிகள் சிரியாவின் பெரும் பகுதியை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
சிரியா எதிர்க்கட்சிகளுக்கு அமெரிக்காவும் அதிபர் ஆசாத் துக்கு ரஷ்யாவும் ஆதரவு அளித்து வருகின்றன. ஆசாத் அழைப்பின் பேரில் ரஷ்ய விமானப் படை கடந்த சில மாதங்களாக சிரியாவில் முகாமிட்டு தாக்குதல் நடத்தி வந்தது.
இந்தப் பின்னணியில் அமெரிக்கா, ரஷ்யா முயற்சியால் சிரியாவில் அண்மையில் போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து அதிபர் ஆசாத் பிரதிநிதிகளும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளும் ஜெனீவாவில் நேற்றுமுன்தினம் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்கினர்.
இந்நிலையில் திடீர் திருப்ப மாக சிரியாவில் முகாமிட்டுள்ள ரஷ்ய படைகளை வாபஸ் பெற அதிபர் விளாடிமிர் புதின் நேற்று உத்தரவு பிறப்பித்தார். அதன்பேரில் ரஷ்ய போர் விமானங்கள் நேற்றுமுதல் தாய்நாடு திரும்பி வருகின்றன. ரேடார், ஏவுகணை தடுப்பு சாதனம் உள்ளிட்டவை சரக்கு விமானம் மூலம் ரஷ்யாவுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. ரஷ்ய அதிபர் புதினின் முடிவை உலக நாடுகள் வரவேற்றுள்ளன.