Published : 25 Oct 2021 03:07 AM
Last Updated : 25 Oct 2021 03:07 AM

22 ஹெலிகாப்டர்களில் சுற்றி வளைத்து கொலம்பியா போதைப்பொருள் கடத்தல் மன்னன் கைது

கொலம்பியாவில் கடந்த25 ஆண்டுகளாக மாபெரும் போதைப்பொருள் சாம்ராஜ்யத்தை நடத்தி வந்தவர் டைரோ அன்டோனியோ உசுகா (50). இவர் ஒட்டோனெயில் என்றே பரவலாக அறியப்படுகிறார். தனது இளம் வயதில், கொலம்பியாவுக்கு எதிரான கிளர்ச்சிப் படைகளில் இணைந்து பணியாற்றினார். பின்னர், 1990-களில் கிளர்ச்சிப் படைகள் அரசால் ஒடுக்கப்பட்டன.

இதையடுத்து, அன்டோனியாவுக்கு போதைப்பொருள் கடத்தலில் ஆர்வம் ஈடுபட்டது. தொடக்கத்தில், மிகச்சிறிய அளவிலான போதைப்பொருட்களை கைமாற்றி வந்த அன்டோனியா, ஒருகட்டத்தில் சர்வதேச அளவில் போதைப்பொருட்களை கடத்தும் அளவுக்கு சென்றார். 'கல்ஃப் க்ளான்' என அழைக்கப்படும் அவரது குழு 2005-ம் ஆண்டுக்கு பிறகு அந்நாட்டின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பலாக உருவெடுத்தது.

இதன் தொடர்ச்சியாக, கடந்த2017-ம் ஆண்டு முதல் அன்டோனியோவை கைது செய்யும் ஆபரேஷனில் கொலம்பியா அரசு தீவிரமாக ஈடுபட்டது. இதற்கு அமெரிக்க உளவுத்துறையும் உதவியது. அவரை பிடிப்பதற்காக சுமார் 5 ஆயிரம் வீரர்கள் அடங்கிய சிறப்புப் படை அமைக்கப்பட்டது.

இந்த சூழலில்தான், கொலம்பியா - பனாமா நாட்டு எல்லைப் பகுதியான நெக்கோக்லி வனப்பகுதியில் அன்டோனியோ பதுங்கியிருப்பதாக கடந்த வாரம் உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.இதன்பேரில், 22 ஹெலிகாப்டர்களுடன் அப்பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், சுரங்கம் ஒன்றில் மறைந்திருந்த அவரை பாதுகாப்புப் படையினர் நேற்று கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகஅரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x