

உலகின் மிகப்பெரிய ஹைட்ரஜன் உற்பத்தியாளராக திட்டமிட்டிருப்பதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சவுதி அரேபிய எரிசக்தி அமைச்சர் சல்மான் கூறும்போது, “ எண்ணெய் உற்பத்தியில் முதன்மை நாடாக சவுதி அரேபியா உள்ளது. சூரிய ஒளி மற்றும் காற்று மூலம் புதுப்பிக்கப்பட்ட ஆற்றலை அதிகளவு சவுதி உற்பத்தி செய்கிறது. உலகின் மிகப்பெரிய ஹைட்ரஜன் உற்பத்தியாளராக சவுதி இருக்க திட்டமிட்டிருக்கிறோம்.
உலகின் அனைத்து நாடுகளுக்கும் ஹைட்ரஜனின் மிகப்பெரிய சப்ளையராக இருக்க விரும்புகிறோம். சவுதி அரேபியா முழு உலகிற்கும் ஆற்றலை வழங்குவதில் உறுதியாக உள்ளது” என்று தெரிவித்துள்ளர்.
சவுதி அரேபியா இரண்டு விசயங்களுக்கு பெயர் பெற்றது. ஒன்று, அதன் எண்ணெய் வளப் பொருளாதாரம். மற்றொன்று, அங்கு நிலவும் மதரீதியிலான கட்டுப்பாடுகள். 1938 ஆம் ஆண்டு சவுதியில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டது. அது முதலே, உலக அளவில் பொருளாதாரரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்த நாடாக சவுதி மாறத் தொடங்கியது.
சவுதியின் பொருளாதாரம் முழுமையாக கச்சா எண்ணெயை சார்ந்தே இருக்கிறது. தற்போது உலகம் மின்சார வாகனங்களுக்கு மாறிவருகிற நிலையில், நீண்ட நாட்களுக்கு அந்நாடு கச்சா எண்ணெயை மட்டும் நம்பி தன் பொருளாதாரத்தை கட்டமைக்க முடியாது.
எனவே, கச்சா எண்ணெய் அல்லாத பிற வழிகளிலும் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான நிர்பந்தத்தில் சவுதி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.