

வட இலங்கையில் உள்நாட்டுப் போர் நடைபெற்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து தற்கொலைப் படையினர் அணியும் ஜாக்கெட், வெடிமருந்துகள் மற்றும் தள வாடங்களை அந்நாட்டு போலீஸார் நேற்று கைப்பற்றினர்.
இது தொடர்பாக வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம் போலீஸார் நேற்று கூறும்போது, “சாவகச்சேரியில் ஒரு வீட்டில் சோதனை நடத்தியபோது, தற்கொலைப் படையினர் அணியும் ஒரு ஜாக்கெட், 12 கிலோ டிஎன்டி வெடிமருந்து, 100 சுற்று தோட்டாக்கள், 2 பேட்டரி பாக்கெட்டுகள், சார்ஜர்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. உள்நாட்டுப் போர் நடந்த காலத்தில் இருந்து இவை இங்கு பதுக்கி வைக்கப்பட்டிருக்காலம் என சந்தேகிக்கிறோம். வீட்டு உரிமையாளர் தப்பி ஓடிவிட்டார். அவரை தேடி வருகிறோம். மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளோம்” என்றனர்.
இது தொடர்பாக இலங்கை பாதுகாப்பு அமைச்சக செயலாளர் கருணசேனா கூறும்போது, “ஏற்கெனவே உள்நாட்டு சண்டை நடைபெற்ற இடங்களில் இதுபோல் ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் கைப்பற்றப்படுவது வழக்கமான ஒன்று. இதனால் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏதுமில்லை” என்றார்.
இலங்கையில் உள்நாட்டுப் போர் கடந்த 2009-ல் முடிவுக்கு வந்தது. இதற்கு முன் 30 ஆண்டுகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் சாவகச் சேரி இருந்தது. அரசுக்கு எதிராக சண்டை நடைபெற்ற இடங் களில் ஒன்றாக சாவகச்சேரி விளங் கியது.