Published : 23 Oct 2021 06:24 PM
Last Updated : 23 Oct 2021 06:24 PM

டிவி தொடர்களில் ஆபாசம்; கட்டுப்படுத்த பாகிஸ்தானில் புதிய சட்டம்

பாகிஸ்தானில் டிவி தொடர்களில் கட்டிப்பிடிக்கும் காட்சிகள் காட்டப்படுவதை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் எலக்ட்ரானிக் மீடியா ஒழுங்குமுறை ஆணையம் உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களுக்கு அறிவுறுத்தல் ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் கட்டிப்பிடிக்கும் காட்சிகளை தணிக்கை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது, பாகிஸ்தான் தொலைக்காட்சி நாடகங்களில் இதுபோன்ற காட்சிகள் அதிகஅளவில் இடம்பெறுவதாக வந்த புகார்களை அடுத்து இந்தத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆட்சேபனைக்குரிய காட்சிகள் என்பது அநாகரிகமான ஆடை அணிதல், படுக்கை காட்சிகள் மற்றும் சைகைகள், உணர்ச்சியை தூண்டும் காட்சிகள், சர்ச்சைக்குரிய இடங்கள் மற்றும் தேவையற்ற விவரங்கள், பார்வையாளர்களை மிகவும் தொந்தரவு செய்வது, பார்வையாளர்களை மன உளைச்சல் மற்றும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒழுக்கத்தின் தரத்திற்கு எதிராக இருப்பது போன்ற காட்சிகளாகும் எனவும் புதிய அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்கான காரணத்தை விளக்கிய அதிகாரிகள், பொதுமக்களிடமிருந்து வந்துள்ள புகார்கள் மட்டுமின்றி வாட்ஸ்அப் குழுக்களில் தவறான தகவல்கள் அனுப்பப்படுவதும், இஸ்லாமிய போதனைகளுக்கு எதிராக காட்சிகள் இருப்பதும் தவறானது என சுட்டிக்காட்டியுள்ளனர்.

திருமணமான தம்பதியர் காட்சிகள், திருமணத்திற்குப் புறம்பான உறவுகள், மோசமான ஆடை அணிதல், படுக்கை காட்சிகள் மற்றும் நெருக்கம் ஆகியவை காரணமாக இளைஞர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும், பாகிஸ்தான் சமூகத்தின் கலாச்சாரம் சீர்கேடடையக் கூடும் எனவும் தெரிவித்துள்ளனர்.

அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களும் இனி நாடகங்களில் இதுபோன்ற அம்சங்கள் ஒளிபரப்புவதை நிறுத்த வேண்டும், புதிய சட்டங்களை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும், இல்லையெனில் கடும் நடவடிக்கை பாயும் எனவும் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x