

ஆப்கானிஸ்தானின் ஹெராட் மாகாணத்தில் இன்று நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனார். கடந்த 4 மாதங்களாக தங்களுக்கு சம்பளம் வரவில்லை எனக் கூறி அவர்கள் போராட்டம் நடத்தினர். தலிபான்கள் உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும் என்று கூறி அவர்கள் போராட்டம் நடத்தினர்.
மோசமான நிதிநிலையில் தங்களைச் சார்ந்தோரின் உணவு, மருத்துவம் போன்ற மிக அத்தியாவசியமானத் தேவைகளைக் கூட சமாளிக்க முடியவில்லை என்று அவர்கள் வேதனை பொங்கக் கூறினர்.
டோலோ நியூஸுகுப் பேட்டியளித்த லதீஃபா அலிஸாய் என்ற ஆசிரியர், கடந்த சில மாதங்களாகவே எங்களுக்கு சரியாக சம்பளம் வழங்கப்படவில்லை. ஆகையால் நாங்கள் அன்றாட தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கிறோம் என்றார்.
இன்னும் பெயரிடம் விரும்பா சில ஆசிரியர்கள், எங்கள் குடும்பங்களை வறுமை விரட்டுகிறது. ஒரு மாதமாக என் மகளை மருத்துவமனைக்கு கூட்டிச் செல்ல முடியாமல் தவிக்கிறேன். அன்றாடத் தேவைகளுக்காக வீட்டு உபயோகப் பொருட்களை எல்லாம் விற்றுவிட்டோம். இனி விற்பதற்குக் கூட ஒன்றுமில்லை என்று கூறினர்.
இந்நிலையில் மாகாண கல்வித் துறை தலைவர் சுஹாபுதீன் சாஹிப் கூறுகையில், வரவிருக்கும் நாட்களில் ஒரு மாத சம்பளம் முதலில் வழங்கப்படும் என்றார்.
கடந்த வாரம், இதேபோல் நூரிஸ்தா, சமங்கன் பகுதிகளின் மருத்துவர்களும் ஊதியம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்கள் போராட்டத்தின் போது சம்பளம் கேட்டதோடு, மருத்துவமனைகளில் அடிப்படை மருந்துகளுக்குக் கூட கடும் பற்றாக்குறை நிலவுவதாகத் தெரிவித்தனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கனிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறியபின் அந்நாட்டைத் தங்கள் பிடிக்குள் தலிபான்கள் கொண்டுவந்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசை அகற்றிய தலிபான்கள், இடைக்கால இஸ்லாமிய எமிரேட் அரசை நிறுவியுள்ளனர். ஆப்கனின் பிரதமராக முல்லா முகமது ஹசன் அகுந்த், அவருக்குத் துணையாக முல்லா அப்துல் கனி பராதரும், மவுளவி அப்துல் சலாம் ஹனாபியும் நியமிக்கப்பட்டனர். ஆனால், தலிபான்கள் இன்னும் பழைமைவாதத்திலிருந்து வெளியேறாததால் அங்கு அமைந்துள்ள புதிய ஆட்சிக்கு இன்னும் சர்வதேச அங்கீகாரம் கிட்டவில்லை.