Published : 20 Oct 2021 12:30 PM
Last Updated : 20 Oct 2021 12:30 PM

ஆப்கானிஸ்தான் தொடர்பான பேச்சுவார்த்தை: இந்தியா - தலிபான் பிரதிநிதிகள் நேருக்கு நேர் சந்திப்பு

ரஷ்யா தலைமையில் ஆப்கானிஸ்தான் தொடர்பான பேச்சுவார்த்தை மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறும்போது, ”10 நாடுகள் பங்கேற்ற இந்தப் பேச்சுவார்த்தை செவ்வாய்க்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பொதுவான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு அவசர மனிதாபிமான மற்றும் பொருளாதார உதவிகளை வழங்குவதில் தங்கள் ஆர்வத்தை பிற நாடுகள் வெளிப்படுத்தின” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் கூட்டத்தில் இந்தியா மற்றும் தலிபான்கள் பிரதிநிதிகள் நேருக்கு சந்திக்கின்றனர். இந்த சந்திப்பில் பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஆப்கனில் தலிபான் ஆட்சிக்கான அங்கீகாரம் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

ஆப்கானிஸ்தானைத் தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து, தனது ராணுவ பலத்தை அதிகரிக்க தஜிகிஸ்தானில் ரஷ்யா ராணுவப் பயிற்சிகளை நடத்தியதுடன், அங்குள்ள ராணுவத் தளத்தில் அதன் ஆயுதங்களையும் பலப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இப்பேச்சுவார்த்தையை ரஷ்யா நடத்துகிறது. இப்பேச்சுவார்த்தையில் சீனா, பாகிஸ்தான், இந்தியா உட்பட 10 நாடுகள் கலந்து கொள்கின்றன. அமெரிக்க இக்கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

பின்னணி

ஆப்கனிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறியபின் அந்நாட்டைத் தங்கள் பிடிக்குள் தலிபான்கள் கொண்டுவந்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசை அகற்றிய தலிபான்கள், இடைக்கால இஸ்லாமிய எமிரேட் அரசை நிறுவப்போவதாக அறிவித்தனர். அதற்கான அமைச்சரவைப் பட்டியலையும் கடந்த செப்டம்பர் 8-ம் தேதி அறிவித்தனர்.

ஆப்கனின் பிரதமராக முல்லா முகமது ஹசன் அகுந்த், அவருக்குத் துணையாக முல்லா அப்துல் கனி பராதரும், மவுளவி அப்துல் சலாம் ஹனாபியும் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் 90களில் தலிபான்களின் ஆட்சி அச்சம் தரும் வகையில் இருந்ததால், அந்நாட்டு மக்கள் அண்டை நாடுகளுக்குத் தப்பிச் சென்று வருகின்றனர். ஆனால், மக்கள் யாரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று தலிபான்கள் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x