

நியூசிலாந்தில் கரோனா பாதிப்பு குறைந்து வருவதைத் தொடர்ந்து அங்கு பள்ளிக் கூடங்களை திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ நியூசிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 60 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அக்லாந்தில் மட்டும் 57. எனினும் கடந்த சில நாட்களாக நியூசிலாந்தில் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து பள்ளிகளை திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
நியூசிலாந்தில் இதுவரை 60%க்கு அதிகமான மக்கள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுள்ளனர். 80% மக்கள் ஒரு டோஸ் போட்டுள்ளனர். இதுவரை 3,000க்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
நியூசிலாந்தில் டெல்டா வைரஸ் கரோனா பரவல் காரணமாக அக்லாந்தில் இரண்டு மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. தற்போதுதான் அங்கு நிலைமை மெல்ல திரும்பி வந்துக் கொண்டிருக்கிறது.
ஐரோப்பா உட்பட பல்வேறு நாடுகளிலும், மண்டலங்களிலும் கரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதேசமயம், பல நாடுகள் புதிதாக கரோனா அலைகளையும், உயிரிழப்பையும் சந்தித்து வருகின்றன. குறைவான அளவு தடுப்பூசி செலுத்திய மக்கள் இருக்கும் நாடுகளில் கரோனாவால் உயிரிழப்பு அதிகமாக இருக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் 24 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 49 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். கரோனா பாதிப்பில் தொடர்ந்து அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.