

தேசிய மகளிர் மேம்பாட்டுக் கொள்கையை மேம்படுத்தும் பணியில் இந்தியா ஈடுபாடு காட்டி வருகிறது என ஐக்கிய நாடுகள் சபையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களின் நிலை சார்ந்த ஆணையத்தின் (சிஎஸ்டபிள்யூ) 60-வது வட்டமேஜை அமர்வு ஐ.நா.வில் நடந்தது. இதில், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி பங்கேற்று பேசியதாவது:
பாலின சமத்துவத்தை உறுதி செய்தல், பெண்கள் அதிகாரம் பெறுவதை மேம்படுத் துதல், பெண்களுக்கு எதிரான வன்முறை, பாரபட்சம் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டம் ஆகியவை ஒருங்கிணைந்த சமூக மேம்பாட்டுக்கானவை.பெண்கள் மேம்பாட்டுக்காக சட்ட ரீதியான முயற்சிகள், கொள்கை வடிவமைப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறோம்.
நீடித்த 17 இலக்குகளை முன்வைத்து பெண்களுக்கான தேசிய கொள்கையை மேம்படுத்தி வருகிறோம். இந்தியாவில் 2030-க்குள் நீடித்த வளர்ச்சிக்காக திட்டமிடப் பட்டுள்ள அனைத்து திட்டங்களும் பாலின சமத்துவத்தையும் உள்ளடக்கியே உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
சிஎஸ்டபிள்யூ நேற்று முன்தினம் தொடங்கியது. வரும் 24-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனையொட்டி நியூ யார்க் முழுக்க 400-க்கும் அதிகமான நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. மகளிர் மேம்பாடு இவற்றின் மையக் கருத்தாக இருக்கும்.