

சர்வதேச நாடுகளின் அங்கீகாரத்தைப் பெற தலிபான்கள் உள்நாட்டில் சட்ட ரீதியான அந்தஸ்தைப் பெற வேண்டும் என ஆப்கன் முன்னாள் அதிபர் ஹமீது கர்சாய் தெரிவித்துள்ளார்.
வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா என்ற ஊடகத்துக்கு ஹமீது கர்சாய் அளித்தப் பேட்டியில், "தலிபான்கள் தேர்தல் நடத்தி தேசிய அவையைக் கூட்ட வேண்டும். உள்நாட்டில் சட்ட அந்தஸ்தைப் பெற வேண்டும். ஆப்கன் அரசியல் சாசனத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
உள்நாட்டில் மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றால் தான் அவர்களால் சர்வதேச அங்கீகாரம் பெற இயலும். தேசிய அடையாளமும், சர்வதேச அங்கீகாரமும் பெற்றால் தான் தலிபான்கள் ஆட்சி சிறக்கும்.
அதேபோல் ஆப்கனின் உள்நாட்டு விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடாது இருக்க வேண்டும். சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்ப பாகிஸ்தான் ஆப்கனுடனான உறவை அமைத்துக் கொள்ள வேண்டும்.
பாகிஸ்தான் அண்மைக்காலமாகவே ஆப்கானிஸ்தானின் பிரதிநிதி போல் தன்னைக் காட்டிக் கொள்கிறது. பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானுக்கோ அதன் மக்களுக்கோ பிரதிநிதி இல்லை. இதை பாகிஸ்தான் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இதுநாள் வரை தலிபான்கள் அமைத்துள்ள ஆட்சியை எந்தவொரு தேசமும் அங்கீகரிக்கவில்லை. இது ஆப்கன் மக்களுக்கு மிகவும் ஆபத்தானது. ஏற்கெனவே ஆப்கன் மக்கள் வறுமையில் வாடுகின்றனர் என சர்வதேச அரசியல் ஆலோசகரான அகமது கான் அந்தார் தெரிவித்துள்ளார்.