Published : 18 Oct 2021 06:29 PM
Last Updated : 18 Oct 2021 06:29 PM

ஆப்கன் சிறுமிகள் மீண்டும் பள்ளிக்குத் திரும்ப அனுமதிக்க வேண்டும்: தலிபான்களுக்கு மலாலா வலியுறுத்தல்

ஆப்கானிஸ்தான் சிறுமிகள் மீண்டும் கல்வி கற்க தலிபான்கள் அனுமதிக்க வேண்டும் என்று மலாலா வலியுறுத்தியுள்ளார்.

ஆப்கனில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றி ஒன்றரை மாதங்கள் கடந்துவிட்டன. பெண் குழந்தைகளுக்குக் கல்வி உட்படப் பல தடைகள் ஆப்கனில் விதிக்கப்பட்டுள்ளன.

பெண்களுக்குக் கல்வி மறுக்கப்படுவது குறித்து சர்வதேச அளவில் தொடர் கண்டனங்களைத் தலைவர்கள் பலர் தலிபான்களுக்குத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அமைதிக்காக நோபல் பரிசு பெற்ற மலாலாவும், ஆப்கன் பெண்களின் கல்வி சார்ந்து தொடர் கோரிக்கைகளை வைத்து வருகிறார்.

மலாலா வெளியிட்ட அறிக்கையில், “பெண்களின் கல்வி மறுக்கப்படுவதை எந்த மதமும் அனுமதிக்காது. ஆப்கானிஸ்தான் சிறுமிகள் மீண்டும் கல்வி கற்க தலிபான்கள் அனுமதிக்க வேண்டும். தடையைத் திரும்பப் பெற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஆப்கனில் இயங்கும் பெண் அமைப்புகளும், பெண்களுக்கான மேல்நிலைப் பள்ளிகளை விரைவில் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

ஆப்கனில் தலிபான்கள் ஆட்சி

முன்னதாக, ஆப்கனிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறியபின் அந்நாட்டைத் தங்கள் பிடிக்குள் தலிபான்கள் கொண்டுவந்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசை அகற்றிய தலிபான்கள், இடைக்கால இஸ்லாமிய எமிரேட் அரசை நிறுவப்போவதாக அறிவித்தனர். அதற்கான அமைச்சரவைப் பட்டியலையும் கடந்த செப்டம்பர் 8-ம் தேதி அறிவித்தனர்.

ஆப்கனின் பிரதமராக முல்லா முகமது ஹசன் அகுந்த், அவருக்குத் துணையாக முல்லா அப்துல் கனி பராதரும், மவுளவி அப்துல் சலாம் ஹனாபியும் நியமிக்கப்பட்டனர்.

தலிபான்களின் ஆட்சி அச்சம் தரும் வகையில் இருப்பதால், அந்நாட்டு மக்கள் அண்டை நாடுகளுக்குத் தப்பிச் சென்று வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x